சிறுவாணி குடிநீர் விநியோக திட்டத்தை கோவை மாநகராட்சியே பராமரிக்க தீர்மானம் நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

கோவை: மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி குடிநீர் விநியோக திட்டத்தை மாநகராட்சியே பராமரிக்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்த குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக 48 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் பேசும் போது, ‘‘சிறுவாணி குடிநீர் விநியோக திட்டத்தை குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பதற்கான ஒப்பந்தக்காலம் கடந்த 2004-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. தற்போதைய சூழலில் மாநகராட்சி சார்பில் பெரிய குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. மாநகரில் 3.13 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன.

சிறுவாணி குடிநீரை லிட்டர் ரூ.11 என்ற கட்டண அடிப்படையில் மாநகராட்சிக்கு குடிநீர் வடிகால் வாரியம் விநியோகிக்கிறது. அதன்படி, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.330 கோடி கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. கடந்த ஓராண்டில் ரூ.100 கோடி செலுத்தி, ரூ.240 கோடி தொகை நிலுவையில் உள்ளது.

சிறுவாணி குடிநீர் திட்டத்தை மாநகராட்சியே பராமரித்தால், மாதத்துக்கு ரூ.4 கோடி வரை கட்டணமாக செலுத்தும் தொகை மிச்சமாகும். வழியோரம் உள்ள 6 கிராமங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் மாநகராட்சி ஒப்பந்தம் போட்டு, குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.3.50 கோடி மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்,’’ என்றார்.

தொடர்ந்து சிறுவாணி குடிநீர் வழங்கல் திட்டத்தை மாநகராட்சியின் பராமரிப்பில் எடுத்துக் கொள்ள, தகுந்த உத்தரவுகளை வழங்க அரசை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேயர், மண்டல தலைவர் வாக்குவாதம்: மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு எழுந்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, ‘‘வஉசி மைதானத்தில் தனியார் நிறுவனம் பொருட்காட்சி நடத்த ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஒருநாளுக்கான வாடகைத் தொகையை விட அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான பணி ஆணையை தாமதமின்றி வழங்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த மேயர் கல்பனா, ‘‘சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றால் முன்னரே கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக அமைச்சரிடம் பேசிவிட்டு, அனுமதி வழங்கப்படும்,’’ என்றார். அப்போது மேயருக்கும், மண்டல தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

“பழிவாங்கும் நோக்கில் மேயர் செயல்படுகிறார். நான் இக்கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்கிறேன்” என மீனா லோகு கூறினார். தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள், அவரை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து அவையில் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE