ஆட்சி மாறும்போது லஞ்ச ஒழிப்பு துறை நிறம் மாறுகிறது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பகிரங்க குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரித்தார். இந்த வழக்கில், ஆட்சி மாறும் போதெல்லாம் பச்சோந்தி போல லஞ்ச ஒழிப்புத் துறை நிறம் மாறுவதாக பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவுசெய்தது.

இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ஓ,பி,ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதியப்பட்ட இந்த வழக்கு, தேனி நீதிமன்றத்தில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிவகங்கை தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர் கடந்த 2011-ல் அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும், 2012-ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம், இந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை மறுஆய்வு செய்வதாகக் கூறி, 11 ஆண்டுகள் கழித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தார்.

அப்போது அவர், “எம்.பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் மறு ஆய்வு செய்யப்படும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை, அந்த எதிர்க்கட்சி பின்னர் ஆளுங்கட்சியாகும்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரி வழக்கை முடித்து வைத்து விடுகிறது.

பேரவைத் தலைவரின் செயல்பாடு: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 374 சதவீதம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, 272 சாட்சிகள், 235 ஆவணங்களை சேகரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி அப்படியே தலைகீழாக பல்டி அடித்துள்ளது.

அதிகார வரம்பே இல்லாத சிவகங்கை நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றியிருப்பதன் மூலம் உயர் நீதிமன்றமும் தவறு இழைத்துள்ளது. இந்த வழக்கி்ல் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்குப் பதிலாக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக பேரவைத் தலைவர் நீதிபதி போலசெயல்பட்டு, ஓ.பன்னீர்செல்வத் துக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர அளிக்கப்பட்ட அனுமதியைதிரும்பப் பெறுவதாக உத்தரவிட்டுள்ளார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. புனித மேரி தேவாலயம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து கொண்டு பேரவை தலைவர் உயர் நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்.

இந்த வழக்கில் குற்ற விசாரணை நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப் பட்டுள்ளன. அதற்குப் பதிலாக எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கு சட்டங்கள் பொருந்தாது என அறிவித்து விடலாம். அதேபோல எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைமுறையிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை, ஆட்சி மாறும்போதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்திகள் போல நிறம் மாறுகிறது.

மற்ற வழக்குகளுக்கு முன்னோடி: இந்தத் தவறை அனுமதித்தால் புற்றுநோய் போல சமுதாயத்தை சீரழித்து விடும். லஞ்ச ஒழிப்புத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அழிந்துவிடும். இந்த வழக்குதான் மற்ற வழக்குகளுக்கு முன்னோடியாக உள்ளது. எனவே, கடந்த 2012-ம் ஆண்டு இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்ய எந்ததடையும் இல்லை.

ஆகவே, இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்” என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை செப்.27-க்கு தள்ளிவைத்துள்ளார். ஏற்கெனவே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நோட்டீஸ் பிறப்பித் துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE