வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம் - தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேச்சு 

By கி.மகாராஜன் 


மதுரை: ‘வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியமானது’ என தலைமை நீதிபதி கங்கபுர்வாலா தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேசனில் (எம்பிஏ), ‘வழக்கறிஞர் தொழில் நெறிமுறை’ என்ற தலைப்பில் இன்று (ஆகஸ்ட் 31) கருத்தரங்கு நடைபெற்றது. நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை வகித்தார். எம்பிஏ தலைவர் ஸ்ரீனிவாசராகவன் வரவேற்றார்.

இதில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேசியதாவது: "இளம் வழக்கறிஞர்கள் குதிரை போல் உழைக்க வேண்டும். சாதுக்கள் போல் உணவு அருந்த வேண்டும். வழக்கறிஞர்கள் வசதியான மனுதாரர்களுக்காகவும், ஏழை மனுதாரர்களுக்காகவும் சிறப்பாக உழைக்க வேண்டும். வசதியான மனுதாரர் அதிக கட்டணம் தருவார். ஏழை மனுதாரர் மனதார வாழ்த்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் இரு கண்கள். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும். வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம். வழக்கை நன்கு தெரிந்து கொண்டால் தான் சிறப்பாக வாதிட முடியும்.

கடினமான, முக்கியமான வழக்கு தான் வழக்கறிஞரை அடையாளப்படுத்தும். நீதிமன்றத்தையும், மூத்த வழக்கறிஞர்களையும் மதிக்க வேண்டும். நீதிமன்றத்தில் எதிராக வாதிட்டாலும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். நீதிபதிகள் வழக்கை சுருக்கமாக புரிய வைப்பது வெற்றியை தரும். தொழிலில் கடின உழைப்பு, பொறுமை, உண்மை இருந்தால் வெற்றி பெறலாம்." இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். எம்பிஏ பொதுச் செயலாளர் ஆயிரம் கே செல்வக்குமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE