தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவாக விமர்சித்த நாளிதழ்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான தலைப்பிட்டு விமர்சித்த தினமலர் பத்திரிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கிற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

இந்நிலையில் இன்று (ஆக.31) தினமலர் நாளிதழில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான தலைப்பிட்டு விமர்சிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE