மேட்டுப்பாளையம் ரயில் பாதை தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு: தெற்கு ரயில்வே நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டத்தின் வேகமான வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில், மேட்டுப்பாளையம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு இன்றுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது நீலகிரி மலை ரயில். இதில் பயணிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஆண்டு முழுவதும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நீலகிரி மலைப் பாதை அமைக்கப்பட வித்திட்ட மேட்டுப்பாளையம் ரயில் பாதை அமைக்கப்பட்டு, இன்றுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் வணிகம் மற்றும் அரசியல் காரணங்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ரயில் பாதை அமைப்பது உகந்தது என்று எண்ணினர்.

இது குறித்து நீலகிரி ஆவணக் காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘1855 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் லார்ட் டல்ஹவுசியால், இந்திய ரயில்வே அமைப்பு முதலில் திட்டமிடப்பட்டது. வட இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகக் கட்டுப்பாட்டின் ஒரு கருவியாகவும், உலக சந்தைகளுடன் சாத்தியமான இணைப்பாகவும் ரயில்வேயை அவர் திட்டமிட்டார்.

அவருக்கு தெற்கே ரயில் போக்குவரத்தை தொடங்குவதில் எந்த திட்டமும் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் தங்கிய பிறகு, மெட்ராஸ் பிரசிடென்சிக்கு அரசியல் எல்லைகள் இல்லையென்றாலும், தெற்கே ரயில் இணைப்பை விரிவுபடுத்துவது, தேவையின்போது மெட்ராஸிலிருந்து பம்பாய்க்கு படைகளை அனுப்ப பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

எனவே அவர் இரண்டு பாதைகளை பரிந்துரைத்தார். ஒன்று சென்னையிலிருந்து வாலாஜா சாலை (ஆற்காடு) வேலூர், சேலம் மற்றும் மேற்கு கடற்கரை வழியாக ஒரு கிளை பெங்களூருக்கும் மற்றொன்று நீலகிரி அடிவாரத்துக்கும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 1856 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மெட்ராஸ் ரயில்வேயின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான தென்மேற்குப் பாதை 1864 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதியும், மேட்டுப்பாளையம் வரையிலான நீட்டிப்பு 1873 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் திறக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் என்பது பல பெருங்கற்கால இடங்களைக் கொண்ட ஒரு பழமையான நாகரிக இடமாகும். அதன் பெயர் ஒரு மலையோர ராணுவ புறக்காவல் நிலையத்தைக் குறிக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் பழங்குடி மக்கள் தங்கள் பால் மற்றும் பிற பொருட்களை சமவெளி வணிகர்களிடமிருந்து துணி, தோல், உப்பு மற்றும் பிற பொருட்களுக்கான பரிமாற்றத்திற்கான இடத்துடன் நீண்ட தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
ரயில் பாதையின் விரிவாக்கம் மேட்டுப்பாளையத்தின் நவீன நகரத்திற்கு வழிவகுத்தது.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள், சரக்கு ஏற்றி செல்ல காத்திருந்த மாட்டு வண்டிகள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் 1887 கையேட்டின் படி, இந்த நிலையம் துணை தாசில்தார் மற்றும் இரண்டாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டின் கீழ் ஒரு மருந்தகம், பங்களா, ஹோட்டல் மற்றும் மலைகளுக்கு பயணிகள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான ஏஜென்சிகளின் தபால் நிலையங்களுடன் இருந்தது. 1900-ல் அதன் மக்கள் தொகை வெறும் 800 மட்டுமே.

புதிய ரயில் பாதை அமையும் வரை நீலகிரிக்கு பெங்களூரில் இருந்து வரும் போக்குவரத்து மட்டுமே ஒரே போக்குவரத்து முறையாக இருந்தது. பின்னர் குன்னூர் மலைப்பாதை அமைக்கப்பட்டதும் தொடக்கத்தில் காளைகள் மற்றும் குதிரைகள் மூலம் மலைக்கு செல்லும் பிரதான பாதையாக மாறியது.

பின்னர் ஒரு லாபகரமான டோங்கா சேவை மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே போக்குவரத்து வர்த்தகத்தை ஏகபோகமாக்கியது.

20 ஆம் நூற்றாண்டில் மேட்டுப்பாளையம் தோட்டப் பயிர்கள் மற்றும் கார்டைட் பொருட்களுக்கான முக்கிய போக்குவரத்து வழிமுறையாகவும், மலை காய்கறிகளுக்கான செழிப்பான சந்தை நகரமாகவும் உருவெடுத்தது’ என்றார்.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கொண்டாட்டங்கள்: மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் இரு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சேலம் கோட்ட உதவி இயக்குநர் சுப்ரமணி கூறும் போது, ‘மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேலும், ரயில் நிலையத்தில் ரயில் நிலையம் மற்றும் நீலகிரி மலை ரயிலின் அரிய பழங்கால புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை 110 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நீலகிரி மலை ரயில் மூலம் கல்லாறு வரை அழைத்து செல்லப்பட்டு, மீண்டும் மேட்டுப்பாளையம் அழைத்து வரப்பட்டனர்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE