செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? : நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரி, எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டது என்பதால், இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று பட்டியலிடப்படாததால், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் அருண், பரணிக்குமார் ஆகியோர் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் முறையிட்டனர். அதற்கு நீதிபதி, "இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்" என்றார்.

அதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, "அமலாக்கத் துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தி வரும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE