‘இண்டியா’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம் - முக்கிய முடிவுகள் தொடர்பாக பேசுகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

தேர்தல் வியூகங்கள்: அதன்பின், காங்கிரஸ் சார்பில் கடந்த ஜூலை 17,18-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போதுதான் கூட்டணிக்கு‘இண்டியா’ என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும், அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் வகுப்பது என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, ‘இண்டியா’ கூட்டணியின் 3-வது கூட்டம், மும்பையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். அவருடன் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் செல்கிறார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், இரவில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து, நாளை நடக்கும் கூட்டத்திலும் பங்கேற்று முக்கிய முடிவுகள் தொடர்பாக பேசுகிறார். அதன்பின் நாளை மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE