வெல்டிங் வைக்கும்போது டேங்கர் வெடித்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு: படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள போடிபாளையத்தில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க் ஷாப் உள்ளது. இங்கு தொழிலாளர்களாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வக்கீஸ்(38), ரவி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.

சுந்தராபுரத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு சொந்தமான டேங்கர் லாரி வெல்டிங் வைப்பதற்காக நேற்று இங்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை தொழிலாளர்கள் வக்கீஸ், ரவி உள்ளிட்டோர் லாரியில் இருந்த டேங்கர் மூடியை திறக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மூடிகளை திறந்த அவர்கள், 3-வது மூடியை வெல்டிங் வைத்து திறக்க முயன்றனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் லாரியின் டேங்கர் வெடித்து தீப்பிடித்தது.

இதில் சிக்கி படுகாயமடைந்த வக்கீஸ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். ரவி படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் ரவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து டேங்கரில் பிடித்த தீயை அணைத்தனர். மதுக்கரை போலீஸார் வக்கீஸின் சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘இந்த டேங்கர் லாரி முன்பு பர்னஸ் ஆயில் ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது லாரியை வாங்கியவர், தண்ணீர் ஏற்றிச் செல்லும் பயன்பாட்டுக்காக அதை மாற்ற திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அப்போது டேங்கரின் மீது ஏறிய வக்கீஸ், மூடியை வெல்டிங் வைத்து திறக்க முயன்றுள்ளார். உள்ளே ஒட்டியிருந்த ஆயில், எரிவாயுவாக மாறி வெளியேற வழியில்லாமல் இருந்துள்ளது. அச்சமயத்தில் தீப்பொறி பட்டவுடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE