கிராமங்களில் மினி பஸ் சேவையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கிராமப்புறங்களை மையப்படுத்தி நகரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகளின் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கோவையில் இன்று (ஆக.30) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு காலகட்டத்தின் போது மினி பேருந்து சேவை அறிமுகமானது. அரசு பேருந்து நேரடியாக இயக்க முடியாத தொலைதூர கிராமப் பகுதிகளுக்கு இந்த மினி பேருந்து இயக்கப்பட்டது. விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த மினி பேருந்துகளின் சேவை கைகொடுத்தது. கிராமப் பகுதிகளில் 20 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பேருந்துகள் இயக்கவும் அனுமதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது 800-க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதாக தெரிகிறது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர், கடந்த சில ஆண்டுகளாக இந்த மினி பேருந்துகளின் சேவை குறைந்து விட்டது. தற்போது கோவையில் மட்டும் 16-க்கும் குறைவான மினி பேருந்துகளே இயக்கப்படுகின்றன. மினி பேருந்துகளின் சேவைகள் குறைந்ததால், கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் மக்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக அரசு அமைந்தவுடன் மினி பேருந்துகளின் சேவை விரிவுபடுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியிலும் தெரிவித்திருந்தனர். அதற்கேற்பவும், மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிகளுக்கு மினி பேருந்துகளின் சேவையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மினி பேருந்துகள் இயக்குவதற்கான கிலோமீட்டர் தூரத்தையும் அதிகரித்து தர வேண்டும்” என்று அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் ஆறுச்சாமி, விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE