கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்ய மதுரை எய்ம்ஸுக்கு பிரதான ஒப்பந்தப்புள்ளி கோரப்படுமா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக் கட்டுமானப் பணிக்கான பிரதான ஒப்பந்தப் புள்ளியை உடனடியாக வெளியிட்டு கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான தகுதி அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைக்க ஜூன் 2018-ல் தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவித்து 8 ஆண்டுகள் கடந்து, அடிக்கல் நாட்டி நான்கரை ஆண்டுகளாகி உள்ளன.

‘எய்ம்ஸ்’ கட்டுமானம் எப்போது தொடங்கும் என விடை தெரியாமல் இருந்த மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு சிறிய ஆறுதல் தரும் வகையில் ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ‘எய்ம்ஸ்’ திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடியில், 82 சதவீதமான 1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைகா நிறுவனமும், 18 சதவீதத் தொகையான 350.1 கோடியை மத்திய அரசும் வழங்குகின்றன.

இதுவரை சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகளுக்காக மட்டும் ரூ.12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதான ஒப்பந்தப் புள்ளிக்கு முன்னதாக முன் ஒப்பந்தப்புள்ளி (ப்ரீ டெண்டர்) வெளியிடப்பட்டுள்ளதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. பிரதான ஒப்பந்தப் புள்ளி அறிவித்தால் கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்து பணிகள் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டியராஜா

மதுரை எய்ம்ஸ் குறித்து தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்று வந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறியதாவது: தமிழகத்துக்குப் பின் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகள் எல்லாம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு திறப்பு விழா கண்டு வருகின்றன. ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ -க்கு மட்டுமே புதிது புதிதாக காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு காலம் தாழ்த்தப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. தற்போது முன் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஒப்பந்தப்புள்ளி மதுரை ‘எய்ம்ஸ்’ கட்டுமானத்துக்கான பிரதான ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய மற்றும் இறுதி ஒப்பந்தம் கோருவதில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதியைத் தேர்வு செய்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான ஒப்பந்தப் புள்ளி அக்டோபரில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளி கோரிய பிறகு ‘எய்ம்ஸ்’ கட்டுமானத்தை கட்டும் நிறுவனத்தை இறுதி செய்ய முடியும். அதை இறுதி செய்வதற்கு வரும் டிசம்பர் வரை ஆகலாம். கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு ஜனவரி 2024-ல் வாய்ப்புள்ளது.

எனவே, உடனடியாக பிரதான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டு கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்ய வேண்டும். இனியும் காலதாமதம் செய்யாமலும், காரணம் சொல்லாமலும் மதுரை ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE