அழியும் கலைகளை காக்க அரசு பள்ளி, கல்லூரிகளில் கட்டணமில்லா பயிற்சி - மதுரை மாணவர் முன்னெடுப்பு

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: நாட்டுப்புறக் கலைகளில் ஓன்றான கரகாட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி கற்றுத்தருவதை கடமையாக செய்து வருகிறார் கல்லூரி மாணவர் இ.முனியசாமி.

நாட்டுப்புற மக்களின் வாழ்வியலோடு இணைந்தது கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், காவடி ஆட்டம், கும்மிப் பாட்டு, தெருக்கூத்து, வில்லுப் பாட்டு ஆகிய கலைகள். இவை மக்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். ஆனால், இக்கலைகள் தற்போது அழியும் நிலையில் உள்ளன. இவற்றை காக்க தமிழக அரசு தற்போது நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அந்த வகையில், அரசு இசைக் கல்லூரி மாணவர் இ.முனியசாமி நாட்டுப்புறக் கலைகளை அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இலந்தைக் குளத்தைச் சேர்ந்த விவசாயி இளையராஜாவின் மகன் முனியசாமி (26). இவர் அருப்புக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் படித்த போது, தமிழ்த் துறை பேராசிரியர் அழகு பாரதியின் கூடல் கலைக் கூடம் மூலம் நாட்டுப்புறக் கலைகளை கற்றார்.

தற்போது மதுரை அரசு இசைக் கல்லூரியில் படித்துக் கொண்டே, மற்றவர்களுக்கும் இக்கலைகளை கற்பித்து வருகிறார். இது குறித்து முனியசாமி கூறியதாவது: ஆரம்பக் கல்வியை கிராமத்திலும், உயர்கல்வியை அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியிலும் கற்றேன். தமிழ்ப்பேராசிரியர் அழகுபாரதி, எங்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

அவர் பாடும் ஒயிலாட்டப் பாடல்களுக்கு ஒத்தாசையாக இருந்த போது அப்பாடல்களை கற்றேன். அவரது ஊக்கத்தால் கரகாட்டமும் கற்றேன். கரகம், பறை, ஒயிலாட்டம், தெருக்கூத்து, கும்மிப்பாட்டு உள்ளிட்ட பல கலைகளையும் கற்றுத்தந்தார். கரகாட்டம் ஆடவும், பறை இசைக்கவும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தததால் வீட்டைவிட்டு வெளியேறி தற்போது அரசு கலைக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலைகள் படித்து வருகிறேன்.

நாட்டுப் புறக்கலைகள், நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தக்கூடியது. அழியும் நிலையிலுள்ள கலைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கற்று வருகிறேன். மேலும், மதுரையில் தங்கப் பாண்டி, தவசி ஞானசேகர், மோகன் ஆகியோரிடம் நாட்டுப்புறக் கலை நுட்பங்களை கற்றேன். அரசு பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக கற்று தருகிறேன்.

மேலும், எனது பேராசிரியர் அழகு பாரதியின் கூடல் கலைக் கூடத்தோடும் இணைந்து பயணித்து வருகிறேன். நமது பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கலைகளை அழியாமல் காப்பாற்றி அவற்றை நவீனப்படுத்த வேண்டும். மேலும் இக்கலைகளை கற்க விரும்புவோருக்கு இலவசமாக கற்றுத்தர தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE