கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் சிகிச்சைக்கு பொதுமக்கள் அலைக்கழிப்பு

By செய்திப்பிரிவு

தென்காசி: ஏழை, எளிய மக்கள் உடல்நிலை பாதிப்புக்கு பெரும்பாலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுகின்றனர். இந்திய அளவில் மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.

இருப்பினும் சில பகுதிகளில் ஊழியர்களின் பொறுப்பற்ற பதில், அலைக்கழிக்கும் நிலை போன்றவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தென்காசி மாவட்டம், கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் கண் பரிசோதனை செய்யப்படும் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதை நம்பி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கண் பரிசோதனைக்காக சென்ற மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். கண் பரிசோதனைக்கு யாரும் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், கண் பரிசோதனை செய்பவர் எப்போது வருவார் என தெரியாது என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளனர்.

இது தனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளாகின்றனர். மேலும், நாய்க்கடி, விஷ பூச்சிக் கடி போன்றவற்றுக்கு மருந்து செலுத்துவதற்கான ஊசி இல்லை என்றும், வெளியே சென்று வாங்கி வருமாறும் கூறுகின்றனர். சுகாதார நிலையத்துக்கு அருகில் உள்ள டீக்கடையில் இந்த ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் மருத்துவர் கிடையாது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 7 ஒன்றியங்களில் மட்டும் கண் பரிசோதனை உதவியாளர்கள் உள்ளனர். அவர்கள் கண்ணொளி காப்போம் திட்டத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு முகாம்கள் நடத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் உள்ள மருத்துவர் கண் பரிசோதனை செய்து, சிகிச்சை தேவைப்பட்டால் அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்கிறார். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி, விஷ பூச்சிக் கடிக்கு ஊசிகள் இருப்பு உள்ளது. கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி இல்லை என்று கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும்” என்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “கண் பரிசோதனை செய்பவர்களை பள்ளிகளுக்கு அனுப்பி முகாம் நடத்தி மாணவர்களுக்கு பரிசோதனை செய்வது நல்ல செயல் தான். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பாரம மக்கள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

ஊழியர்கள் பொறுப்புடன், கனிவாக பதிலளித்தாலே மனதில் உள்ள பாரம் இறங்கி, நம்பிக்கை ஏற்படும். ஆனால் இதை பெரும்பாலான ஊழியர்கள் செய்வதில்லை. நோயாளிகளிடம் அனைத்து ஊழியர்களும் கனிவுடன் பேசவும், பொறுப்பாக பதிலளிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE