தொழில், வணிக நிறுவன மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில் மற்றும் வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்த உடனேயே தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

61 ஆயிரம் இணைப்புகள்: தற்போது தொழில் மற்றும் வணிகப் பிரிவில் 61 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. இவற்றில் மாதம்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது.

மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கச் செல்லும் மின்வாரிய ஊழியர்களின் செல்போன்களில் இந்த செயலி பதிவேற்றம் செய்யப்படும். இவை தவிர, ஒவ்வொருவருக்கும் ஆப்டிக்கல் கேபிள் வழங்கப்படும். அந்தக் கேபிளை மின்சார மீட்டர் மற்றும் செல்போனுடன் இணைக்க வேண்டும்.

நுகர்வோருக்கு குறுந்தகவல்: பின்னர், செல்போன் செயலியைஇயக்கியதும் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாடு கட்டண விவரம், கட்டுப்பாட்டு மைய சர்வருக்கு உடனே சென்று விடும். அங்கிருந்து அந்த விவரம் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும்.

செல்போன் செயலியில் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் பரிசோதனை அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும் தலா 5 பிரிவு அலுவலகங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

அந்த அலுவலகங்களின் உதவிப் பொறியாளர்கள், செல்போன் செயலி மூலமாக தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில், வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்தனர். அந்த விவரங்கள் துல்லியமாக பதிவாகின.

இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றதால், இம்மாத இறுதியில் இருந்து அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் செல்போன் செயலியில் மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்குமாறு, மண்டலப் பொறியாளர்களுக்கு, மின்வாரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE