கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: ஓணம் பண்டிகையையொட்டி, அத்தப் பூ கோலம் வரைந்தும், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தும் கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் கேரள மக்கள், ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

மலையாள மொழி பேசும் கேரள மாநில மக்களால், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோவையில் வாளையாறு, வேலந்தாவளம், நவக்கரை, மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாள மொழி பேசும் கேரள மக்கள் வசிக்கின்றனர். நடப்பாண்டு ஓணம் பண்டிகை தினத்தையொட்டி, கோவையில் இன்று (ஆக.29) ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கோவையில் வசிக்கும் கேரளா மக்கள் இன்று அதிகாலை தங்களது வீடுகளுக்கு முன்பு பல்வேறு வகையான மலர்களால் அத்தப் பூ கோலமிட்டனர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய உடையணிந்து, வீட்டில் பூஜை செய்து வழிப்பட்டனர்.

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் செவ்வந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி, சென்டு மல்லி உள்ளிட்ட வண்ண மலர்களால் மெகா அத்தப்பூ கோளம் வரையப்பட்டது. கோயிலில் உள்ள ஐயப்பன், விநாயகர், நாகர் .உள்ளிட்ட சுவாமிக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

கோவையில் வசிக்கும் கேரள மாநில மக்கள் ஏராளமானோர் இன்று சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அன்ன பிரசானம் எனப்படும் சுவாமிக்கு பெற்றோர் சிறப்பு அர்ச்சனை செய்து, தங்களது குழந்தைகளுக்கு சாதம் ஊட்டினர்.பீளமேடு ஐயப்பன் திருக்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பிற ஐயப்பன் கோயில்களிலும் நேற்று சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. கோவை மலையாளி சமாஜம் சார்பில், காந்திபுரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் பல்வேறு வண்ண மலர்களால் அத்தப் பூ கோலம் போடப்பட்டது. கேரள மக்கள் திரண்டு பூக்கோலங்களை வரைந்தனர். பூக்கோளங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE