மதுரை | தரமற்றது என்பதால் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்கத் தடை

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வாசுகி ஆய்வு செய்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் விதைகளை விற்பனை செய்யத் தடை விதித்தார்.

விவசாயிகளின் விதைத்தேவையை பூர்த்தி செய்யவும், நல்ல தரமான விதைகள் கிடைக்கும் வகையில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வாசுகி, மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். அப்போது, விதை இருப்பு, விலைப்பட்டியல்கள், முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கை, விற்பனை அனுமதிச்சான்று நகல்கள், விதை விற்பனை உரிமங்கள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, விதை முளைப்புத்திறன் சோதனையில் தேர்ச்சிபெறாத விதைக்குவியல்கள், விற்பனை அனுமதிச்சான்று இல்லாமல் இருப்புள்ள விதைக்குவியல்கள் என சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 14 மெட்ரிக் டன் விதைகள் இருப்பதை கண்டறிந்து அதனை விற்பனை செய்யத் தடை விதித்தார். இதனால் தரமற்ற விதைகள் விற்பனை செய்வது தடுக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி, உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க வேண்டும்; காலாவதி தேதியை கவனித்தும், விலைப்பட்டியலை கேட்டும் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது, விதை ஆய்வாளர் த.ராஜபாண்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE