நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன: ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் நடப்பதாக ஒய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சந்திரயான்-3 வெற்றி விழாவும், ஒய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் தினகரன், மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் மலர் செல்வி, பொருளாளர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் அறிவியல் அச்சங்களை போக்கி எளிமையாக அவர்களை கேட்விகள் கேட்க வைத்ததோடு அதற்கு எளிமையாக பதில் கூறினார். சந்திரயான்-1ல் தான் பணிபுரிந்த அனுபவங்களை அவர் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

அதன்பின் சிவசுப்பிரமணியன் பேசுகையில், ''சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என பரிசோதனை செய்வதற்காக அனுப்பினோம். அதற்கு முன் வரை நிலவில் தண்ணீர் இருப்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. சந்திரயான்-1 தான் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. சந்திரயான்-2, சந்தரயான்-3 செல்வதற்கான வழிப்பாதையை அமைத்துக் கொடுத்தது சந்திரயான்-1 தான். நமது விண்கலங்களை நிலவில் மெதுவாக சரியாக தரையிறக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம்; தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

சந்திரயான்-2 நினைத்தது போல் இலக்கை சென்றடையவில்லை. நிலவில் மோதி அது செயல் இழந்தது. அதை சரி செய்து சந்திரயான்-3 அனுப்பி தற்போது வெற்றி பெற்றுள்ளோம். இது இந்தியாவிற்கு விண்வெளி துறையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எதிர்காலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அடுத்ததாக, சந்திரயான் 4, சந்திரயான் 5 ஆகியவற்றை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. சந்திரயான்-3 நிலவின் வெப்பநிலை, கனிமங்கள் போன்றவற்றை பரிசோதனை செய்து அனுப்பும். இந்த ஆய்வுகளை 14 நாட்களில் முடித்து அனுப்பும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE