இன்னும் சில மாதங்களில் 3000 மருத்துவப் பணியாளர்களுக்கு பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: இன்னும் சில மாதங்களில் 3,000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பணிஆணையினை வழங்குவார் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.30 லட்சம் செலவில் உணர்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா, முழு உடல் பரிசோதனை மையம், ரூ. 10 லட்சம் செலவில் சிறு பிராணிகள் (Lab Animal House) கூடம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "மருத்துவத்துறையில் 1020 மருத்துவ பணியிடங்களுக்கு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய இருந்த சூழ்நிலையில் ஒரு சில மருத்துவ மாணவர்கள் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

மேலும் இத்தேர்வில் சுமார் 85% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு பணிநியமன ஆணை தருவதற்குள் 14 மருத்துவர்கள் மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்று விட்டார்கள். கரோனா காலங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றுகூறி நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஏற்கெனவே தமிழக அரசினை பொறுத்தவரை, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாத அளவில் கரோனா காலங்களில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் போன்ற பல்வேறு மருத்துவ பணியாளர்களுக்கும் District Health Society மூலமாக எடுக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 20 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கி அவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறோம். ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.

இந்தநிலையில் 14 மருத்துவர்கள் MRB தேர்விலும் கரோனா காலங்களில் பணியாற்றியதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று நீதிமன்றத்துக்கு சென்றிருந்தார்கள். நீதிமன்றம் இத்துறைக்கு எந்தவிதமான அறிவுரைகளும் தராத நிலையில் துறையின் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கரோனா காலங்களில் 2 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்களை தரலாம் என்று முடிவெடுத்து, அரசாணை வெளியிட்டோம். அந்த அரசாணை வெளியிடப்பட்ட அடுத்த நாள் பத்திரிக்கைகளில் மருத்துவர்களின் அறிக்கை, அந்த அறிக்கை என்னவென்றால் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு 5 மதிப்பெண்கள் என்றால் 6 மாதம், 7 மாதம் பணியாற்றிய மருத்துவர்கள் இருக்கின்றோம், ஆகையால் எங்களுக்கும் இந்த மதிப்பெண்கள் பிரித்து தந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு அறிக்கை விடுத்திருந்தார்கள்.

தமிழக முதல்வரை பொறுத்தவரை, ஒருவர் பாதித்தால் கூட பாதிப்பு பாதிப்புதான் என்று நினைத்து அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுங்கள் என்று இத்துறைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் அவர்கள் பணியாற்றிய காலங்களுக்கான மதிப்பெண்கள் பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது. கரோனா காலங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனைகளில் கரோனா காலங்களில் பணியாற்றிய சான்றிதழ்களை சமர்ப்பித்து அதற்குரிய மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம். அப்பணிகள் முடிந்தவுடன் 1021 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கிடையில் 1000 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதுவும் MRB மூலமாக விரைவில் நிரப்பப்படும். இதற்கிடையில் MRBயில் 983 மருந்தாளுநர்களுக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் 43,000 பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். மேலும் 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கும் தேர்வு முறை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக இன்னும் ஒருசில மாதங்களில் 3000க்கும் மேற்பட்ட மருத்துவப்பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பணிஆணையினை வழங்குவார்." இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE