மிசா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி பணியாளர்கள் மதுரை மேயரிடம் புகார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மாநகராட்சி பணியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசி வரும் 3வது மண்டல தலைவரின் கணவர் மிசா பாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பதோடு பணியாளர்களுக்கு பணிகளை மேற்கொள்ள தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மேயரிடம், மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று புகார் மனு வழங்கினர்.

திமுக முன்னாள் துணை மேயரும், மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவருமான பாண்டிச்செல்வியின் கணவர் மிசா பாண்டியன் ஆரம்பத்தில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். மு.க. அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்ததால் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2016-ல் மதுரை மத்திய தொகுதியில் வெற்றிபெற்றவுடன் அவரின் ஆதரவாளராக மாறினார். தனது மனைவிக்கு கவுன்சிலர் சீட் பெற்று அவரை கவுன்சிலராக வெற்றிப்பெற வைத்து மண்டலத் தலைவராகவும் ஆக்கினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர், திமுக பெண் கவுன்சிலரை மிரட்டியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண் கவுன்சிலர் திமுக தலைமையிடம் புகார் கொடுத்ததை அடுத்து மிசா பாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், மிசா பாண்டியன், தொடர்ந்து தனது மனைவியின் மண்டலத்தலைவர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகப்பணிகளில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட சுந்தரராஜபுரம் 75ஆவது வார்டு பில் கலெக்டராக (வருவாய் உதவியாளர்) பணியாற்றி வரும் ராமச்சந்திரன் என்பவரை தகாத வார்த்தையால் பேசியதாக நேற்று இரவு பில் கலெக்டர்கள், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள பெண் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தில் கணவன்மார்களோ, குடும்பத்தினரோ தலையிடக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியுள்ளதாகவும், தற்போது அவரின் உத்தரவை மீறி தலையிடும் மிசா பாண்டியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் புகார் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ''மாநகராட்சி 3வது மண்டலத்தில் வருவாய் உதவியாளராகப் பணியாற்றி வரும் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசிய மிசா பாண்டியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வரும் மதுரை மாநகராட்சி பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த செயலை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE