சென்னையின் அனைத்து தெருக்களிலும் தடையின்றி கஞ்சா விற்பனை: ராமதாஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைக்கின்றன?” என்று கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் புதிய போதை பூதமாக உருவெடுத்துள்ள கஞ்சா, சென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் தடையின்றி விற்கப்படுகிறது” என்று காட்டமாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் ஐயத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த இராதாகிருஷ்ணன் நகர் காவல்நிலைய சார் ஆய்வாளர் பாலமுருகன், அந்த சிறுவர்களால் கொடூரமான வகையில் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் சார் ஆய்வாளர் பாலமுருகன், விரைவில் முழுமையான நலம் பெற்று பணிக்கு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் சார் ஆய்வாளரே தாக்கப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கும் முதல் செய்தி என்றால், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஐந்து பேரும் பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் இரண்டாவது செய்தி ஆகும். பதின்வயதில் இப்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர் என்பது தான் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் மூன்றாவது செய்தி ஆகும். மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கிறது. பத்தாம் வகுப்பில் இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ள சிறுவர்கள் எந்த அச்சமும், குற்றவுணர்வும் இல்லாமல் கஞ்சா மற்றும் மதுவை அருந்தி விட்டு, காவல் அதிகாரியை தாக்கத் துணிகிறார்கள் என்றால், கஞ்சாவும், மதுவும் எந்த அளவுக்கு தடையின்றி கிடைக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

தண்டையார்பேட்டையில் காவல் அதிகாரி தாக்கப்பட்டது தனித்த நிகழ்வு அல்ல. கடந்த 22-ஆம் நாள் சென்னை போரூரை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்கள், அங்கு விசாரணைக்காக சென்ற காவலர் ஒருவரை கத்தியால் குத்தும் நோக்கத்துடன் துரத்திச் சென்ற காணொலி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே சென்னை தண்டையார் பேட்டையில் காவல் அதிகாரி ஒருவர் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சி அரங்கேறியிருக்கிறது. அடுத்தடுத்து நிகழும் இத்தகைய நிகழ்வுகள் தமிழகம் எங்கே செல்கிறது? என்ற அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கஞ்சா விற்பனையும், சட்டவிரோத மது விற்பனையும் அதிகரித்து விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் சொல்லும் நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைக்கின்றன? மது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? அதேபோல், தமிழகத்தில் புதிய போதை பூதமாக உருவெடுத்துள்ள கஞ்சா, சென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் தடையின்றி விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்ற மதுவையும், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். கஞ்சாவை ஒழிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறையும், அரசும் கூறி வரும் போதிலும் கஞ்சா வணிகமும், அதனால் ஏற்படும் சீரழிவுகளும் சிறிதும் குறையவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியும், எதிர்காலமும் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது. ஆனால், அவர்கள் போதையின் பிடியில் சிக்கி சீரழிந்து வருவது வேதனையாக உள்ளது.

கஞ்சா மற்றும் மதுவின் போதையிலிருந்து இளைஞர் சமுதாயத்தைக் காப்பதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

1. தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2. தமிழ்நாட்டில் ஏதேனும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டால், அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் கமுக்கமாக வைக்கப்படுவதுடன், சரியான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும்.

3. தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் கஞ்சா பெரும்பாலும் பிற மாநிலங்களில் இருந்து தான் கடத்தி வரப்படுகிறது. பிற மாநிலங்களில் விளைவிக்கப்படும் கஞ்சாவை அம்மாநில அரசின் உதவியுடன் அழிக்கும் அதிகாரம் தமிழக காவல்துறைக்கு உண்டு. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கஞ்சாவை அதன் ஆதாரத்திலேயே ஒழிக்க வேண்டும். எல்லைகளில் சோதனை நடத்தி கடத்தல் கஞ்சாவை பிடிக்கும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

4. கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களையும் ஒழிப்பதற்காக துடிப்பான காவல் அதிகாரிகள் தலைமையில் படைகளை அமைத்து சிறப்பு இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்.

5. போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து மாதம் ஒருமுறை காவல்துறையின் தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு குறித்த புதிய உத்திகளை வகுத்து, செயல்படுத்தி தமிழ்நாட்டை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.

6. ஏற்கெனவே பல முறை நான் வலியுறுத்தியவாறு, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்