தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ் ஆசிரியர்கள் தேர்வு: பல நல்லாசிரியர்கள் உருவாக விருதுகள் உத்வேகமாக இருக்கும் - ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: கல்வித்துறையில் அசாதாரண முயற்சி மற்றும் பங்களிப்புக்காக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வான வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.மாலதி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிஆசிரியர் காட்வின் வேதநாயகம் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். கல்வித் துறையில் தமிழகம் செய்துவரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் இருந்து ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் தேசியநல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக இந்த விருதுகள் உத்வேகமாக இருக்கும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆசிரியர்கள் இருவருக்கும் பாராட்டுகள். நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற விருதுகள் மேலும் உத்வேகத்தை அளிக்கும். ஆசிரியர் பணியில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றிட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE