நீட் தேர்வுக்கு எதிராக போராட ஒரு உதயநிதி போதாது: அமைச்சர் உதயநிதி பேச்சு

By செய்திப்பிரிவு

திருச்சி / புதுக்கோட்டை: 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெல்லும் என திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது: சேலத்தில் நடைபெறவிருக்கும் இளைஞரணி மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நீங்கள் மாற்றிக் காட்ட வேண்டும். அந்த மாநாட்டின் பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு. இதன்மூலம் நமது மாநாடு பாதி வெற்றி பெற்றுவிட்டது. மீதி வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும்.

மாநிலம் முழுவதும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மூன்றரை லட்சம் பேர் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொண்டாலே மாநாடு வெற்றி பெற்றுவிடும். மதுரையில் அண்மையில் கேலிக்கூத்தான மாநாடு நடைபெற்றது. அதேவேளை, நாம் மக்களின் மிக முக்கிய பிரச்சினையான நீட் தேர்வுக்காக அறப்போராட்டம் நடத்தினோம்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட ஒரு உதயநிதி போதாது. நீங்கள் அனைவரும் உதயநிதிபோல செயல்பட வேண்டும். நாட்டில் 9 ஆண்டுகளாக நடைபெறுவது கார்ப்பரேட் ஆட்சி. மத்திய அரசால் வாழ்ந்தது அதானி என்ற ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான். அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையில் மத்திய பாஜக அரசு சாலை அமைத்தல், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களில் ரூ.7 லட்சம் கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்ததுபோல, 2024 மக்களவைத் தேர்தலில் அவர்களின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெல்லும். அதற்கு முன்னோட்டமாக சேலம் மாநாட்டுக்கு வருகை தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டையில்..: முன்னதாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி அருகே நேற்று இரவு நடைபெற்றமாவட்ட அளவிலான திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு, மாவட்ட திமுக சார்பில் ரூ.1 கோடி, இளைஞர் அணி சார்பில் ரூ.10 லட்சம்அளித்ததற்கு நன்றி. இந்தியாவிலேயே முதன் முதலாக இளைஞர் அணியை திமுகதான் உருவாக்கியது.

நான் கலந்து கொள்ளும் எந்தக் கூட்டத்துக்கும் பட்டாசு வெடிக்கக் கூடாது, பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது என்று நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறேன். இளைஞர் மன்ற பதவியில் இருந்து படிப்படியாக உழைத்து இன்று கட்சியின் தலைவராகி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதேபோலத் தான் அவர் முதல்வராகி இருப்பதும். ஆனால், மற்றவர்களைப்போல மேஜைக்கு அடியில் பிறரின் காலை பிடித்து அவர் முதல்வர் ஆகவில்லை.

குடும்ப ஆட்சியை நடத்துவதாக கூறுகின்றனர். ஆம், திமுகவினர் அனைவருமே ஒரு குடும்பம்தான். ஒரு வீட்டுக்குள் பாம்பு வர திரும்பதிரும்ப முயற்சிக்கிறது என்றால், அதற்கு வீட்டுக்குள்ளும், வாசலிலும் உள்ள புதர்தான் காரணம். தமிழகம் என்ற வீட்டுக்குள் பாம்பு என்ற பாஜக நுழைய முயற்சிக்கிறது என்றால், அதற்கு காரணம் புதர் என்ற அதிமுகதான். எனவே, பாஜகவுடன் சேர்த்து அதிமுகவையும் நாம் அகற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்து ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE