“அதிமுக மாநாட்டை கண்டு நடுங்கி திமுக எழுச்சி மாநாடுக்கு ஏற்பாடு” - செல்லூர் ராஜூ

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி பங்கேற்று பேசினார்.

மாநாட்டுக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் அசைவ விருந்து வழங்கி நன்றி தெரிவித்தார். முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் பேசியது.

“அதிமுக மாநாடு வெற்றி பெற முழுக்க முழுக்க காரணம் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தான். மாநாடு குறித்து அடிக்கடி கவனம் செலுத்தி பணிகளை கவனித்தார். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி அதிமுக மாநாடு இருந்தது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பொதுச்செயலாளர் பேச்சை கேட்க தொண்டர்கள் காத்திருந்தனர்.

2014-ல் கூட்டணி இன்றி அதிமுக வெற்றி பெற்றது. பொதுச்செயலாளர் என்ன நினைக்கிறார் என எங்களுக்கே தெரியாது. அவர் மனதில் என்ன நினைக்கிறர் என தெரியாது. நேரம் வரும் போது சொல்வார். அதிமுக மாநாட்டை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடுங்கிவிட்டார். மாநாட்டை கண்டு திமுக பயந்து டிசம்பரில் இளைஞரணி திமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளனர்.

மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு எல்லாம் உணவுகளை வாரி, வாரி வழங்கினோம். ஓரிரு கவுன்டரில் குறை இருந்திருக்கலாம். குறை சொல்லுபவர் எப்படி வேண்டுமானாலும் சொல்வாார்கள். நாட்டை காப்பாற்றியதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் தனித்து நின்று தேர்தலில் நிற்கட்டும். பட்டம் என்ன பெரிய பட்டம். மக்கள் சேர்ந்து பொதுச்செயலாளருக்கு கொடுத்த பட்டம் போதும். மாநாடு மூலம் வலுவாக மாறிவிட்டேன் என பொதுச்செயலாளர் காட்டிவிட்டார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE