தேசப்பற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் பாஜகவில் இணைய வேண்டும்: மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

By என்.சன்னாசி

சென்னை: தேசப்பற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் பாஜகவில் இணையவேண்டும் என்று மதுரையில் மத்திய இணை அமைச்சர் விகே. சிங் தெரிவித்துள்ளார்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே முன்னாள் ராணுவத்தினர் பாஜக பிரிவு மாநில மாநில மாநாடு இன்று நடந்தது. மாநிலத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாணிக்கம் நடராஜன், செயலர் ஆனந்த ஜெயம் வரவேற்று பேசினர். மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மதுரை பெருங் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மேற்கு மாவட்ட ராணுவ வீரர் பிரிவு தலைவர் ஆண்டி உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மத்திய விமான படைத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கணவரை இழந்த 50 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் 50 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்டங்களை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்திலுள்ள மாவட்டங்களில் முன்னாள் ராணுவத்தினர்கள் உருவாக்கிய பல்வேறு சங்கங்கள் செயல்படு கின்றன.அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முன்னாள் ராணுவத்தினரின் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும்.

மத்திய அரசு தற்போதைய ராணுவ துறையை பல்வேறு டிஜிட்டல் நவீன தொழில்நுட்பங்களுடன் உலக நாடுகள் பயப்படும் வகையில் துடிப்புடன் வைத்துள்ளது. நமது ராணுவ பிரிவுக்கு பல்வேறு நவீன உத்திகளைக் கொண்ட ராணுவ தளவாடங்கள் வாங்கப்பட்டுள்ளன. தேசிய நீரோட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பாஜக மட்டுமே வலிமையான கட்சியாகும். பாஜகவால் நாட்டு மக்களுக்கு பல்வேறு உன்னத நலத்திட்டங்களை வழங்க முடியும்.

தேசப்பற்று உடைய அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் பாஜகவில் இணைந்து இந்தியாவை காப்பாற்ற முன்வரவேண்டும் . மத்திய அரசின் நலத் திட்டங்களை தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளும் இன்றி திறம்பட ஆட்சி செய்து, உலக அளவில் இந்தியாவை உற்றுநோக்க வைத்துள்ளார். மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,000-க்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE