கடலூர் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால உலோக சாமி சிலைகள் கண்டெடுப்பு

By க.ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே திருநாரையூரில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 9 சாமி சிலைகளையும் வருவாய் மற்றும் காவல்துறையினர் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி அருகே உள்ளது திருநாரையூர். இக்கிராமத்தில் புகழ் பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த உத்திராபதி என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கு நேற்று (ஆக.26) சனிக்கிழமை அஸ்திவாரம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடப்பாறையால் தோண்டும் போது டங் என்ற சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அஸ்திவாரம் தோண்டும் பணியில் இருந்த வள்ளல் என்பவர் இது குறித்து வீட்டு உரிமையாளர் உத்திராபதியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் அப்படியே இருக்கட்டும் எனக்கூறி அஸ்திவாரம் தோண்டும் தொழிலாளர்களை மாற்று வேலை செய்யச் சொல்லி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இன்று (ஆக.27) காலை பணிக்கு வந்த தொழிலாளர் வள்ளல் அந்த இடம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்து கிராம உதவியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தவலறிந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சீனுவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சோழன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உரிமையாளர் உத்திராபதி வீட்டுக்குள் சென்று பார்த்த போது பழங்கால வெங்கல சாமிசிலைகள் 6 இருந்தன. சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் எஸ்பி ராஜாராம் தலைமையில் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார், குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீஸார் சிலைகளை மீட்டனர்.

இதுகுறித்து போலீஸார் உத்தராபதியிடம் விசாரணை நடத்தியதில் இன்று (ஆக.27) அதிகாலையில் எழுந்து பள்ளம் தோண்டி அதில் இருந்த 6 சாமி சிலைகளை எடுத்து மறைந்து வைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் பொக்லைன் மூலம் தோண்டினர் அதில் மேலும் 3 சிலைகள் கிடைத்தன.

தற்போது கைப்பற்றப்பட்ட பீடத்துடன் உள்ள சிவன் பார்வதி,இடம்புரி விநாயகர் ,நடராஜர் ஆடிப்பூர அம்மாள் , சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்மன் ,திரிபூரநாதர் (சிவன் ). சண்டீஸ்வரர், திருஞானசம்பந்தர் ஆகிய சாமி சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சிலைகளை எடுத்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையான சிலைகள் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE