பெருமாநல்லூர் அருகே ஊராட்சி பள்ளியில் பட்டியலின பெண் சமைத்ததால் மாற்றுச் சான்றிதழ் கேட்ட பெற்றோர்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே ஊராட்சி பள்ளியில் பட்டியலின பெண் சமைத்ததால், மாற்றுச் சான்றிதழ் கேட்ட பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் ஊராட்சி காரிங்கராயன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 44 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டம்நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

இதில், அதே ஊரை சேர்ந்த ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த தீபா என்பவர் உணவு சமைத்து, பள்ளி மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார். இதனால், பெற்றோர் சிலர் குழந்தைகளை காலை சிற்றுண்டியை சாப்பிடாமல் புறக்கணித்து வெளியேறினர். மேலும், மாற்றுச் சான்றிதழ் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வள்ளிபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன், 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: காரிங்கராயன் பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் பட்டியலின பெண் சமைத்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்களை சமாதானப் படுத்தி,காவல்துறை மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சிலர் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழ் கேட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) வழக்கம்போல் அனைவரும் காலை உணவு சாப்பிட்டனர்” என்றார்.

பள்ளி தரப்பிடம் கேட்டபோது, "மாணவர்கள் வருகை பதிவேட்டின்படி, அனைவரும் நேற்று காலை உணவு உட்கொண்டனர். சனிக்கிழமை என்பதால் மாணவர்கள் சிலர் வரவில்லை. வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது" என்றனர்.

மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறும்போது, "காரிங்கராயன்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தீபா என்பவர் தான் செய்து வருகிறார். அரசு உத்தரவுப்படி அறிவுறுத்தப்பட்ட உணவுகள் தயார்செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதே பள்ளியில் தொடர்ந்து தீபா பணியாற்றுவார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE