மதுரை ரயில் பெட்டி தீ விபத்து | உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம்  சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயிர் தப்பியவர்களும் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

மதுரையில் சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகளை சொந்த ஊர்களுக்கு விமான மூலம் அனுப்பி வைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, 28 பயணிகள் மதுரை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு வந்தனர். இன்டிகோ விமானம் மூலம் 12.30 மணிக்கு லக்னோவுக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக அவர்களை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் வழி அனுப்பி வைத்தார். அப்போது இந்த விபத்தில் தப்பிய குழந்தைக்கு மேயர் முத்தமிட்டு நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினார்.

விமானத்தில் சென்ற உடல்கள்: இதற்கிடையில் ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்த 9 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு விமானத்தில் கொண்டு செல்லும் வகையில் பாதுகாப்பாக மரப்பெட்டிகளில் உடல்கள் வைக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டது. 3 இலவச அமரர் ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் சென்னையிலிருந்து லக்னோ செல்லும் விமானத்தில் 4 உடல்களும், சென்னை - பெங்களூரு வழியாக லக்னோவுக்கு செல்லும் மற்றொரு விமானத்தில் 5 உடல்களும் கொண்டு செல்லப்பட்டன. உடல்களுடன் மதுரையைச் சேர்ந்த 4 ஆர்பிஎஃப் வீரர்களும், 4 ரயில்வே போலீஸாரும் உடன் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மதுரையில் நின்றிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ பிடித்தது குறித்து தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் எதுவுமில்லை என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > மதுரை சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தின் பின்னணியில் சதித்திட்டம் எதுவும் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தகவல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE