மதுரை சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தின் பின்னணியில் சதித்திட்டம் எதுவும் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தகவல்

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் நின்றிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ பிடித்தது குறித்து தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் எதுவுமில்லை என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்தார்.

மதுரை ரயில் நிலையம் அருகே போடி லைனின் நிறுத்தி இருந்த சுற்றுலா பயணிகளுக்கான ரயில் பெட்டியில் சிலிண்டரை பயன்படுத்தியபோது, தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் குழு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் 2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறையின் தடயவியல் குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விபத்துக்குள்ளான பெட்டிக்குள் எரிந்த நிலையில், கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டு உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். மேலும், சிலிண்டர் வெடித்து சிதறிய பாகங்களும் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரித்துள்ளனர்.

இந்நிலையில், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று மதுரை வந்தார். அவர் விபத்துக்குள்ளான பெட்டியைப் பார்த்து ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்துள்ளனர். அவர்களிடமும் பாதுகாப்பு ஆணையர் விசாரித்தார். பிறகு கோட்ட ரயில்வே மேலாளர் ப. அனந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தீவிபத்துக்கான காரணம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்து குறித்து உரிய விசாரணை முறையாக நடக்கிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும். சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பர்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சையிலுள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம். சுற்றுலா ரயில் பெட்டிகள், பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் இனிவரும் காலங்களில் இதுபோல் விபத்து நடக்காமல் இருக்க, உரிய விதிமுறைகளை கடுமையாக வகுக்கப்படும். இவ்விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதித் திட்டம் எதுவுமில்லை எனத், தெரியவந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்", என்று அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ப. அனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE