சென்னை: "தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் ஆணையிட்டது. ஆனால், அந்த நீரை கூட முழுமையாக திறக்காத கர்நாடகம், 15 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே காவிரியில் நீர் திறப்பை நிறுத்தி விட்டது. இது பெரும் அநீதியாகும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரை கர்நாடக அரசு முற்றிலுமாக நிறுத்தி விட்டதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 3,000 கன அடி என்ற அளவில் குறைந்து விட்டது. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு குறுவை பாசனத்துக்காக ஒரு வாரத்துக்கு கூட தண்ணீர் திறக்க இயலாது என்பதால், குறுவை நெற்பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
டெல்லியில் கடந்த 11-ம் நாள் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள பயிர்களைக் காக்க வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டது. அதன்படி 12-ம் நாள் முதல் காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட கர்நாடகம், 15 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து விட்டது. அதனால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 3421 கன அடியாக குறைந்துவிட்டது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பும் 53.70 அடியாக, அதாவது 20 டிஎம்சியாக குறைந்து விட்டது. குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச தேவைகளுக்காக 15 டிஎம்சி தண்ணீரையாவது இருப்பு வைக்க வேண்டும் என்பதால், அது போக மீதமுள்ள 5 டிஎம்சியைக் கொண்டு அடுத்த ஒரு வாரத்துக்கு கூட குறுவை பாசனத்துக்காக தண்ணீரைத் திறக்க முடியாது. அதிக நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்து விட்டது. காவிரியில் இவ்வளவு குறைவாக தண்ணீர் திறப்பதால் எந்த பயனும் இல்லை; இதையும் கூட அதிக நாட்களுக்கு தொடர முடியாது.
காவிரி பாசனப் படுகையில் அறுவடைக்கு முந்தைய நிலையை அடைந்துள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி வீதம் அடுத்த 40 நாட்களுக்கு 40 டிஎம்சி தண்ணீராவது தேவைப்படுகிறது. ஆனால், கர்நாடக அரசோ, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் ஆணையிட்டது. ஆனால், அந்த நீரை கூட முழுமையாக திறக்காத கர்நாடகம், 15 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே காவிரியில் நீர் திறப்பை நிறுத்தி விட்டது. இது பெரும் அநீதியாகும்.
கர்நாடகத்திடமிருந்து காவிரியில் உடனடியாக தண்ணீர் பெறவில்லை என்றால், காவிரி படுகையில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற முடியாது. கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறுவதற்காக நமக்குள்ள ஒரே வாய்ப்பு நாளை நடைபெறவிருக்கும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் கூட்டம் தான். காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுப்பதற்காக இந்தக்கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் நிலவும் சூழல் குறித்தும், கடந்த காலங்களில் கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறக்காதது குறித்தும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் எடுத்துரைத்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைப்படி, கடந்த ஜூன், ஜூலை மற்றும் நடப்பு ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் 86.38 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை சுமார் 30 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளில் 73 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் செப்டம்பர் மாத இறுதி வரை தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டும். செப்டம்பர் ஒன்றாம் நாள் காவிரி சிக்கல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்களை முன்வைத்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago