சென்னை மாநகராட்சி சார்பில் 100 மாணவர்களுக்கு ரூ.27 லட்சத்தில் கிரிக்கெட், கால்பந்து பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி சார்பில் 100 மாணவர்களுக்கு ரூ.27 லட்சத்தில் கிரிக்கெட்மற்றும் கால்பந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிட்டிஸ் (CITIIS) என்ற சிறப்பு திட்டம் மூலமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளை புதுமை மற்றும் மாதிரி பள்ளிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், மின் ஆளுமை மிக்கதாக மாற்றுதல், கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல், கலை, இலக்கியம், மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய கூறுகளை மேம்படுத்த ரூ.95.25 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விளையாட்டு துறையில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்பந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை உள்ளடக்கிய கால்பந்து அணிகளை உருவாக்கி, 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சி 11 மாதங்களில் 80 பயிற்சி நாட்களில் ( வாரம் 2 முறை ) கொடுக்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி உடை, காலணி இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சி முதல்கட்டமாக வட சென்னையில் பெரம்பூர் மார்க்கெட் ரோடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, மத்திய சென்னையில் சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தென் சென்னையில் கோட்டூர் மாநகராட்சி உயர் நிலைப் பள்ளி ஆகியவற்றில் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.8 லட்சத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களை முறையான வரைவு திட்டத்தின் படி கல்வி மாவட்ட வாரியாக தேர்வு செய்து, அதில் மிக திறமையான 30 மாணவர்களை கொண்ட மாநகராட்சி பள்ளிகள் கிரிக்கெட் அணி உருவாக்கப்படும். இப்பயிற்சி 12 மாதங்களில், 154 பயிற்சி நாட்களில் (வாரம் 3 முறை) கொடுக்கப்படும்.

இப்பயிற்சியில் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு, மட்டை, பந்துகள், காலணிகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் வழிகாட்டுதலில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமியால் வழங்கப்படுகிறது. பயிற்சிக்காக 6 பயிற்சி தளங்கள் நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவீன முறையில் உருவாக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE