சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை இன்று முதல் ரத்து: ரயில்வே அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று (ஆக. 27) முதல் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. பயணிகள் பாதிக்காத வகையில், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்க வேண்டும் பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ரூ.279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

இதன் காரணமாக, வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே மேம்பால ரயில்கள் இன்று (ஆக.27) முதல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன.

140 கூடுதல் பேருந்து சேவை: கடற்கரை - சிந்தாதிரிபேட்டை இடையே ரயில் சேவை ரத்தால், பயணிகள் பாதிக்காத வகையில், கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது,‘‘பயணிகளுக்கு தடையின்றி பேருந்து சேவை கிடைக்க உரிய ஏற்பாடு செய்கிறோம். ஏற்கெனவே, சிந்தாரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாக சென்ட்ரல், பாரிமுனை, திருவொற்றியூர், அண்ணாசதுக்கம், கடற்கரை நிலையம் வழியாக தினமும் 391 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிந்தாரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை (ஆக. 27) முதல் சென்ட்ரல், கோட்டை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தினமும் 140 சேவைகளை கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE