மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து: உத்தர பிரதேச பயணிகள் 9 பேர் பரிதாப உயிரிழப்பு

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் நேற்று அதிகாலை ரயில் பெட்டியில் நேரிட்ட தீ விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்து, ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா செல்வது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டு, ஐஆர்சிடிசி மூலம் ரயில் பெட்டியை முன்பதிவு செய்தனர்.

கடந்த 17-ம் தேதி லக்னோவில் இருந்து புறப்பட்ட குழுவினர், விஜயவாடா, ரேணிகுண்டா, மைசூரு, பெங்களூரு சென்றுவிட்டு நேற்று முன்தினம் நாகர்கோவில் சென்றனர். பின்னர், அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி, புனலூர்- மதுரை எக்ஸ்பிரஸில் இணைக்கப்பட்டு நேற்று அதிகாலை 3.50 மணிக்கு மதுரையை வந்தடைந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, பின்னர் சென்னை சென்று, அங்கிருந்து லக்னோ திரும்பத் திட்டமிட்டிருந்தனர்.

அந்த ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையம் அருகே ஒரு கி.மீ. தொலைவில், போடி லைன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் சிலர் கீழே இறங்கி, தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். பலர் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தனர். காலை 5 மணியளவில் திடீரென பெட்டியில் இருந்து கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ பரவி, பெட்டி முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ரயிலில் இருந்த பயணிகள் அலறினர்.

பெட்டியில் 4 வழிகள் இருந்தபோதும் அவை மூடப்பட்டு, ஒரு வழி மட்டும் திறந்திருந்தது. பலர் பெட்டியில் இருந்து குதித்து தப்பினர். பயணிகளின் அலறல் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு, குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த திடீர் நகர், தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் அங்கு வந்தனர்.

மண்டல தீயணைப்பு அதிகாரி விஜயகுமார், மாவட்ட அலுவலர் வினோத் தலைமையில் 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். ரயில் பெட்டியில் 9 பேர் கருகிய நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. அவர்களில் 6 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.

தொடர் விசாரணையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பரமேசுவரர் குமார் குப்தா (55), மதிலேஷ் குமார் (62), சந்திரமன் சிங் (65), அன்குர் கஷாயம் (36), கியூமான் பன்சல் (22) சாந்திதேவி வர்மா (57) மனோரமா அகர்வால் (82) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இருவரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அவர்களது உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மேலும், விபத்தில் காயமடைந்த 6 பேர் ரயில்வே மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் தப்பியவர்கள் மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

விபத்து நேரிட்ட பெட்டியில் ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 3 காஸ் சிலிண்டர்கள், 5 மண்ணெண்ணெய் அடுப்புகள், சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள், விறகுக் கட்டைகள் ஆகியவை கழிப்பறை பகுதியில் எரிந்து கிடந்தது தெரியவந்தது.

பெட்டியில் பயணித்தவர்கள் சட்டவிரோதமாக காஸ் சிலிண்டர்கள், ஸ்டவ் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். அதிகாலையில் ஒருவர் சிலிண்டரைப் பற்றவைத்து காபி போட்டுள்ளார். அப்போது காஸ் கசிந்து, விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர் தீயை அணைக்க முயற்சிக்காமல், பயத்தில் பெட்டியில் இருந்து குதித்து தப்பியதால், தீ பரவி, உறங்கிக் கொண்டிருந்தவர்கள் புகையில் சிக்கி, மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. விபத்து தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விபத்துக்கு காரணம் என்ன? எக்ஸ்பிரஸ் ரயில்களில் சிலிண்டர், ஸ்டவ் போன்றவற்றை கொண்டு செல்ல தடை உள்ளது. ஆனால், விபத்து நேரிட்ட பெட்டியில் திருமண நிகழ்ச்சிக்குத் தேவையான அளவுக்கு, சமையல் பாத்திரங்கள், சிலிண்டர்கள், காய்கறிகளைக் கொண்டு வந்துள்ளனர்.

லக்னோவில் அவர்கள் கிளம்பும்போதே இதைக் கண்காணித்து, அவற்றை அதிகாரிகள் ஏன் பறிமுதல் செய்யவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. தனி பெட்டி என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை, எனவே விபத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவுதான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ப.ஆனந்த் தலைமையிலான குழு, உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. விபத்து நடந்த பெட்டியில் உள்ள தடயங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், சென்னையில் இருந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மதுரை சென்று, விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ரயில் பெட்டியில் சிலிண்டர்களைக் கொண்டு வந்ததாலேயே தீ விபத்து நேரிட்டுள்ளது" என்றார்.

அமைச்சர்கள் ஆறுதல்: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விபத்து குறித்த தகவலறிந்து, மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்தோரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE