ஒக்கி புயலால் கடலில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால், கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் கிராமங்களில் தொடர்ந்து இன்றும் (திங்கள்கிழமை) பதற்றம் நிலவுகிறது.
தங்கள் உறவுகள் உயிருடன் திரும்புவார்களா என்று கண்ணீர் மல்க காத்திருக்கின்றன சொந்த பந்தங்கள். இந்நிலையில் நிவாரணப் பணிகளில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புயலுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) வரை குமரி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. எல்லா கிராமங்களிலும் மீனவர்கள் சிலரைக் காணவில்லை என்பதால், குமரியில் எந்தத் துறைமுகத்தில் இருந்தும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை காலை ஒருவரின் உடல் கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அவர் ராமன்துறையைச் சேர்ந்த ஜெர்மயாஸ் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவரின் சொந்த ஊரான ராமன்துறையில் உடனே அடக்கம் செய்யப்பட்டது.
மீனவர்கள் மூவர் கரை திரும்பினர்
இதற்கிடையே திங்கட்கிழமை, நீரோடித்துறையைச் சேர்ந்த ராஜி (47), கிறிஸ்துதாஸ் (35), தபேயுஸ் (29) ஆகிய மூவரும் கரைக்குத் திரும்பினர். இதில் ராஜி லேசான காயங்களுடனும், கிறிஸ்துதாஸ் மற்றும் தபேயுஸ் ஆகியோர் பலத்த காயங்களுடனும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் மார்த்தாண்டம் துறையைச் சேர்ந்த பொலிப்பாஸ் (55), தூத்தூர் புத்தந்துறையைச் சேர்ந்த மஸ்கோ ()32, மற்றும் பேர் தெரியாத மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே நீண்டகரையில் கடற்கரையில் இருந்து 47 நாட்டிக்கல் தொலைவில் அவர்கள் ஆறு பேரும் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கரைதிரும்பிய மீனவர்கள் கூறியுள்ளனர்.
ரூ.100 கோடி சேதம்
கன்னியாகுமரியில் உள்ள சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டிணம், குளச்சல் ஆகிய 3 அரசுத் துறைமுகங்கள் ஒக்கி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
தனியார் துறைமுகமான முட்டத்திலும் சேதம் அதிகமாக உள்ளது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதியதால் பெருத்த அளவில் சேதம் ஏற்பட்டது.
துறைமுகங்களில் கடல் அலைகளின் வேகத்தைக் குறைக்க அலைத் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருக்கும். அச்சுவர்களில் 70% சேதமடைந்தது. மொத்தத்தில் சேத மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
களப்பணியில் மின்சார ஊழியர்கள்
குமரி மாவட்டத்தில் 20 சதவீதப் பகுதிகளுக்கு மின்சாரம் வந்துள்ளது. மதுரை, விருதுநகர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மார்த்தாண்டத்தைச் சுற்றியுள்ள பல மீனவ கிராமங்களில் இன்னும் மின்சார இணைப்புக்கான பணி தொடங்கவில்லை. மின்சாரம் இல்லாததால் உணவகங்கள் இன்னும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கவில்லை.
தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீனவ குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓபிஎஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீனவர் குடும்பங்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துப் பேசினர்.
ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்த மத்திய அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''கடந்த 100 ஆண்டுகளில் இத்தகைய புயலை நாம் சந்தித்ததில்லை. மத்திய அரசு ஆரம்பத்தில் இருந்தே புயல் குறித்த எச்சரிக்கைகளையும் முன்னறிவிப்புகளையும் வழங்கி வருகிறது. என்னை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது கொல்லம் அருகே தமிழகம் மீனவர்கள் தத்தளிப்பதாக அவர்கள் கூறினர். அவர்களையும் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருப்பதிசாரம் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதியில் இருந்தே மீட்புப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் கேரளாவில் கப்பற்படை, விமானங்கள் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன'' என்றார்.
நிவாரணப் பணிகளில் இளைஞர்கள்
கன்னியாகுமரியில் போக்குவரத்து ஓரளவு சீரடைந்துள்ளது. பேருந்து, லாரிகள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கத் தொடங்கியுள்ளன.
புயலால் வீழ்ந்த மரங்கள், செடிகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளில் உள்ளூர் இளைஞர்கள் பலர் இணைந்து தன்னார்வலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago