நெல்லை மாவட்டத்தில் 99% குளங்கள் வறண்டன - அணைகளில் நீர் இருப்பு கவலைக்கிடம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. அக்னி நட்சத்திர காலத்தைப்போல் தொடர்ந்து வெயில் சுட்டெரிக்கும் நிலையில் 99 சதவிகித குளங்கள் வறண்டுவிட்டன. அணைகளில் நீர் இருப்பு கவலை அளிக்கும் வகையிலேயே இருக்கிறது. அணைகளில் மிஞ்சியிருக்கும் தண்ணீரை குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்திலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தற்போது மாவட்டத்தில் தினசரி பகல்நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக உள்ளது. காலை 7 மணிக்கெல்லாம் கொளுத்தும் வெயில் மாலை 6 மணிவரை நீடிக்கிறது. நண்பகல், பிற்பகல் வேளைகளில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெப்பத்தின் தாக்கம் இரவிலும் இருக்கிறது. புழுக்கம் காரணமாக இரவில் வீடுகளில் தூக்க முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்.

மாவட்டத்தில் மழை பொய்த்துவிட்டது. கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 22.97 மி.மீ. மழை மட்டுமே பெய்திருந்தது. இது வழமையான மழையளவைவிட 12.97 சதவிகிதம் குறைவாகும். நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் 1.60 மி.மீ. மழை மட்டுமே கிடைத்துள்ளது. இது வழமையான மழையளவைவிட 93.13 சதவிகிதம் குறைவாகும். வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் குளங்கள் வறண்டுவிட்டன.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 781 கால்வரத்து குளங்களில் 769 குளங்கள் வறண்டுள்ளன. 12 குளங்களில் ஒரு மாதத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. மொத்தமுள்ள 316 மானாவாரி குளங்களும் வறண்டுள்ளன. மொத்தமாக 1097 குளங்களில் 1085 குளங்கள் வறண்டுள்ளன. 99 சதவிகிதம் குளங்களும் வறண்டுவிட்டதால் பல இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை தலையெடுத்துள்ளது.

மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12882 மில்லியன் கனஅடியாகும். தற்போது 1534.65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 6019.78 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. மொத்தமாக அணைகளில் தற்போது 11.91 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 46.70 சதவிகிதம் தண்ணீர் இருந்தது.

6 அணைகளிலும் தற்போதைய நீர்மட்டம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம்): பாபநாசம்- 52.05அடி (103.50 அடி), சேர்வலார்- 64.73 (113.68), மணிமுத்தாறு- 41.95 (78.15), வடக்கு பச்சையாறு- 6.75 (13.25 ), நம்பியாறு- 12.49 (12.49), கொடுமுடியாறு- 10.25 (46.25).

மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டில் 41016 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் கார் பருவத்தில் 12305 ஹெக்டேர், பிசான பருவத்தில் 27891 ஹெக்டேர், கோடை பருவத்தில் 820 ஹெக்டேர் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இம்மாதம் வரையில் 3159 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10051 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றிருந்தது. இதுபோல் சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்து பயிர்கள் என்று அனைத்து பயிர்களின் சாகுபடியிலும் பெருமளவுக்கு சரிவு காணப்படுகிறது.

மொத்தமாக மாவட்டத்தில் 55886 ஹெக்டேரில் அனைத்து பயிர்களின் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய வறட்சியால் இதுவரை வெறும் 5324 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 12244 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE