குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றத்துக்கு எதிராக மெட்ராஸ் பார் அசோசியேஷன் தீர்மானம் 

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய குற்றவியல் சட்டம், இந்தியன் சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இது தொடர்பான, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா 2023 ஆகிய மூன்று மசோதாகள் கடந்த ஆக.11-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இம்மசோதாக்கள் முறையே இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1987 ஆகியவைகளுக்கு மாற்றாக இருக்கும்.

மக்களவையில் இம்மசோதாகளின் அறிமுகத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குடிமக்களுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளை பாதுகாப்பதே இம்மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும். பிரிட்டிஷ் காலத்துச் சட்டங்கள் அவர்களின் ஆட்சியை வலுப்படுத்துவதாகவும் பாதுகாப்பதாகவுமே உருவாக்கப்பட்டன. அதன் நோக்கம் தண்டிப்பதே, நீதி வழங்குவது கிடையாது" என்றார்.

மேலும்,"நாங்கள் (அரசு) இரண்டு அடிப்படைகளில் இந்த மாற்றத்தினைக் கொண்டு வர இருக்கிறது. இந்தியாவின் குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதே புதிய சட்டத்தின் ஆன்மாவாக இருக்கும். இதன் நோக்கம் யாரையும் தண்டிப்பது இல்லை மாறாக நீதி வழங்குவதே. இந்த நடைமுறையில், குற்றத்தைத் தடுக்கும் உணர்வினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கும் இடத்தில் தண்டனை வழங்கப்படும்" என்றது நினைவுகூரத்தக்கது.

இந்திய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்கும் மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய குற்றவியல் சட்டம், இந்தியன் சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE