இரும்புலியூரில் ஆபத்தை உணராமல் தண்டவாள பயணம் - எஸ்கலேட்டருடன் நடைமேம்பாலமும் அமைக்கப்படுமா?

By பெ.ஜேம்ஸ்குமார்


இரும்புலியூர்: தாம்பரம் கிழக்கு, இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர்கள், ரயில் நிலையம், கடைகள், கல்வி நிறுவனங்கள் என எங்கு சென்றாலும், பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அல்லது கிழக்கு தாம்பரம் செல்ல வேண்டும். இந்த 2 இடங்களுக்கும் சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும். அதனால், இரும்புலியூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து ஜிஎஸ்டிசாலைக்கு செல்லும் மக்கள், அங்கிருந்து பேருந்து மூலம் பல இடங்களுக்கு செல்கின்றனர்.

தண்டவாளம் வழியாக சென்றால் ஓரிரு நிமிடத்தில் ஜிஎஸ்டி சாலைக்கு சென்று விடலாம் என்பதால், வயது வித்தியாசமின்றி பலரும் தண்டவாளத்தை கடக்கின்றனர். குறிப்பாக, ‘பீக் ஹவர்’ நேரத்தில், ஏராளமானோர் கடந்து செல்கின்றனர்.

தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை வட, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் ஆகியவை மாறி மாறி இரும்புலியூர் பகுதியை கடந்து செல்கின்றன. இதனால், விபத்துகள் நடந்து, ரயிலில் அடிபட்டு பொதுமக்கள் உயிரிழப்பதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது.

ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில் நடந்து செல்வது, செல்போனில் பேசியபடியோ, செல்ஃபி படம் எடுத்தபடியோ தண்டவாளத்தை கடப்பது, நண்பர்களுடன் பேசிக்கொண்டே செல்வது போன்ற அஜாக்கிரதையால் பலர் ரயிலில் அடிபட்டு காயமடைகின்றனர். சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரும்புலியூர் பகுதியில் மட்டும் 25-க்கும் மேற்பட்டோர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். இதனால், பொதுமக்கள் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. சில இடங்களில் சுவர் அமைக்கப்பட்டது. அப்படி இருந்தும், ஏராளமானோர் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

எனவே, பெரும்பாலான மக்கள் தண்டவாளத்தை கடக்கும் இடத்தில், கிழக்கு இரும்புலியூர் பகுதி மக்களின் வசதிக்காக, ஜிஎஸ்டி, சாலை - ரயில்வே பாதையை கடக்கும் வகையில் நடைமேம்பாலம் கட்டினால், இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம். பொதுமக்களும் பயனடைவார்கள். மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் தாமதம் செய்யப்பட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

அதனால், ரயில்வே நிர்வாகம் நெடுஞ்சாலைத் துறை இணைந்து, நடைமேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து, அதை செயல் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணிக்கம்

இதுகுறித்து அப்பகுதி பிரமுகர்கள் கூறியதாவது: தாம்பரம் கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் கே.மாணிக்கம்: கிழக்கு இரும்புலியூர் பகுதி மக்கள் பேருந்து நிலையம் செல்வதானால், 3 கி.மீ. செல்ல வேண்டும். இதனால் வேறு வழியின்றி தண்டவாளத்தை கடக்கின்றனர். இதை தடுக்க, சுவர் அமைக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தண்டவாளத்தை கடக்க வழி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் தண்டவாளத்தை மிகவும் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். குறிப்பிட்ட அந்த இடத்தில் நடைமேம்பாலம் அமைப்பது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமின்றி, எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் தலையிட்டு, விரைவில் எஸ்கலேட்டருடன் கூடிய நடை மேம்பாலத்தை அமைக்க வேண்டும். தண்டவாளத்தோடு, ஜிஎஸ்டி சாலையையும் சேர்த்து கடக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதே, கடந்த 20 ஆண்டுகளாக அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

பி.விஜயசாரதி

சமூக ஆர்வலர் பி.விஜயசாரதி; இரும்புலியூர் பகுதியில் இருந்துதாம்பரத்துக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை. ௮தனால் பொதுமக்கள் ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கின்றனர். தொடர் விபத்துகள் நடப்பதை தடுக்க, தண்டவாளத்தின் 2 பக்கவாட்டிலும் ரயில்வே நிர்வாகம் சுவர் அமைத்துவிட்டது. இதனால் இரும்புலியூர் பகுதி, தனி தீவு போல ஆகிவிட்டது. எங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இங்கிருந்து 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வாக, நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கோரி வருகிறோம். விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வந்து, மக்களின் குறைகளை கேட்கின்றனர். ஆனால், தீர்வுதான் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது: தண்டவாளத்தில் நிகழும் உயிரிழப்புகள், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, அவர்களது கோரிக்கையை ஏற்று இரும்புலியூர் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆய்வு செய்து நடைபாலம் அமைக்கப்படும் என அவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

இதற்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகமும், மாநில அரசும் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விரைவில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படும். தண்டவாளத்தை மட்டுமின்றி, ஜிஎஸ்டி சாலையையும் கடக்கும் வகையில் நடைபாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்காக அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்