சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
பயணிகளின் வசதிகளை மேம்படுத்த, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, பயணிகள் தேவைகளை கேட்டறிந்து, நிறைவேற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, மெட்ரோ ரயில்களில் பெண் பயணிகளுக்கான தேவைகள் என்ன என்பதை அறிய பிரத்யேக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் மகளிர் கலை, அறிவியல் சேர்ந்த 35 மாணவிகளை தேர்வு செய்து, சென்னை மெட்ரோ ரயில் அலுவலகத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது.
பெண் பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் தொடர்பான கணக்கெடுப்பு என்பதால், தினமும் அதிகாலை நேரம், இரவு நேரம், கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பயணம் செய்த பெண்களிடம் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாறு 41 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கல்லூரி மாணவிகள் கணக்கெடுப்பை நடத்தி முடித்தனர்.
மெட்ரோ ரயில்களில் தினமும் எத்தனை பெண்கள் பயணம் செய்கின்றனர், மெட்ரோ ரயில்களில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது, பெண் பயணிகளுக்கு வேறு வசதிகள் ஏதாவது தேவைப்படுகிறதா என்பது தொடர்பாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த விவரங்களை ஒருங்கிணைத்து, அறிக்கை தயாராகி வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானது என 97 சதவீத பெண் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியபோது, மெட்ரோ ரயில்களில் பெண் பயணிகள் எண்ணிக்கை 15 சதவீதம் மட்டுமே இருந்தது. இப்போது அது 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் தற்போது தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர் அதாவது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெண் பயணிகள். இதில் 62.68 சதவீதம் பெண்கள் 18-30 வயதினர்.
கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள்தான் இதில் அதிகம். இந்த கணக்கெடுப்பில், 97 சதவீத பெண்கள், ‘‘மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானது’’ என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில், ரயில் நிலையம், டிக்கெட் பெறும் இடம், நடந்து செல்லும் படிக்கட்டுகள், எஸ்கலேட்டர் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா இருப்பதால், பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.
செல்போன், பணப்பை என ஏதாவது உடமைகள் தவறினாலும், தகவல் கொடுத்தால் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர் என்பதையும் பெண்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெளியே குறிப்பிட்ட இடத்துக்கு பாதுகாப்பாக செல்ல போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவது, நிலையத்தின் உள்ளே கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் பெண்கள் வைத்துள்ளனர். பெண்களின் கோரிக்கைகள், தேவைகளை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago