டம்மீஸ் டிராமா குழுவின் 20-வது ஆண்டு தொடக்க விழா

By வா.ரவிக்குமார்

மயிலாப்பூரிலேயே பிறந்து வாழ்ந்துவரும் 60, 70 வயதைத் தொட்டிருக்கும் முதியவர்களிடம் இந்தப் பகுதியின் சிறப்பு என்ன என்றால், 3 ‘R’களைச் சொல்வார்களாம். அவை.. ஆர்.ஆர்.சபா (ரசிக ரஞ்சனி சபா), ராயர் கஃபே, ராஜாஜி சீவல் கடை.

சென்னையில் தொடங்கப்பட்ட பழமையான சபாக்களில் ஒன்று ஆர்.ஆர்.சபா. பல சந்தர்ப்பங்களில் மியூசிக் அகாடமியின் நிகழ்ச்சிகள் ஆர்.ஆர்.சபாவில் நடந்திருக்கின்றன. 1945-ல் மியூசிக் அகாடமியும், ஆர்.ஆர். சபாவும் இணைந்து ‘சியாமா சாஸ்திரி வாரம்’ கொண்டாடியிருக்கின்றன. ஆர்.ஆர்.சபா தற்போது புதுப்பிக்கப்பட்டு டிசம்பர் இசை விழாவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த சபாவில் ‘டம்மீஸ் டிராமா குழு’ தனது 20-வது ஆண்டு தொடக்க விழாவை டிசம்பர் 23-ம் தேதி நடத்த உள்ளது.

கல்வி, விருந்தோம்பல், மருத்துவம், அறிவியல், கணிதம், பக்தி இப்படி பல தலைப்புகளில் இருக்கும் நல்ல கருத்துகளைப் பிரச்சார தொனியில் இல்லாமல் தன்னியல்பில் நாடகத்தில் கொண்டுவந்து ரசிகர்களின் ரசனையை உயர்த்தும் நாடகக் குழு என்னும் சிறப்பை பெற்றிருப்பது டம்மீஸ் டிராமா குழு. நாடகக் கலைமீது கொண்ட காதலால் ஸ்ரீவத்ஸன், கிரிதரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது டம்மீஸ் டிராமா. இந்தக் குழுவில் மேடையிலும், அரங்க நிர்மாணத்திலுமாக 50 பேர் உள்ளனர்.

அதென்ன டம்மீஸ்?

90-களில்தான் கணினி ஓரளவு பிரபலமானது. இதையொட்டி, தங்கள் குழுவுக்கு ‘ஃபிளாப்பி’ என்று பெயர் வைக்க நினைத்தாராம் ஸ்ரீவத்ஸன். நண்பர்கள் ஒப்புக்கொள்ளாததால், அன்றைக்கு கணினி தொடர்பான நூல்களை அதிக அளவில் அச்சிட்ட பதிப்பகமான டம்மீஸ் பெயரை குழுவுக்கு வைத்துவிட்டாராம். தங்களது 20 ஆண்டு பயணத்தின் முக்கிய தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஸ்ரீவத்ஸன். அவர் கூறியதாவது:

கட்டணமில்லா நாடக சேவை

ஒருசில நாடகக் குழுக்கள் தவிர, மற்ற நாடகங்களுக்கு மக்கள் ஆதரவு இல்லாத சூழல் இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் என்னுடைய 2 நண்பர்களோடு இணைந்து டம்மீஸ் நாடகக் குழுவைத் தொடங்கினோம். கட்டணம் வசூலிக்கக் கூடாது. நாடகத்தை வளர்க்க அது ஒன்றே சிறந்த வழி என்று நினைத்தோம். 20 ஆண்டுகளில் 32 நாடகங்களை நான் எழுதி, இயக்கி அரங்கேற்றியிருக்கிறோம். கே.பாலசந்தர் சார் மீண்டும் நாடகம் இயக்கத் தயாரானபோது, அவருக்காக ‘பவுர்ணமி’ என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தேன்.

நாடகத்தின் இரண்டு கண்

ரசிகர்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுதான் நாடகம் நடத்தவேண்டும் என்பதை எங்கள் கொள்கையாகவே வைத்திருந்தோம். அதனால் இன்ஃபோடைன்மென்ட் (Information + Entertainment) வகை நாடகங்களையே ரசிகர்களுக்குக் கொடுத்தோம்.

இந்தியாவின் 2 கண்களான அறிவியலையும், ஆன்மிகத்தையும் எங்களது பெரும்பாலான நாடகங்களில் கையாண்டிருப்போம். ‘வைத்தியசாலா’ உள்ளிட்ட 3 நாடகங்கள் முழுக்க முழுக்க மருத்துவத்தை மையப் படுத்தியே இருக்கும்.

இஸ்ரோவை மையப்படுத்தி ‘ஹனுமான்’ என்ற நாடகத்தை அரங்கேற்றினோம். கடந்த ஆண்டு ‘வாயு’ எனும் நாடகத்தை அரங்கேற்றினோம். மாருதி கார் நிறுவனம் இந்தியாவில் எப்படி வந்தது என்பதை கருவாகக் கொண்ட இந்த நாடகத்தில், மேடையிலேயே மாருதி காரை கொண்டுவந்தோம்.

நாடகத்தின் வசனங்களில் ஆங்கிலப் பிரயோகம் அதிகம் இருக்கிறதே எனும் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்வோம். அதேநேரம், தேவைக்கு மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறோம். வலிந்து திணிப்பதில்லை. `I C U’ என்ற நாடகத்தில் மருத்துவம் சார்ந்த மொழியை ஆங்கிலத்திலேயே பிரயோகப்படுத்தினோம். இதை வைத்து, நகர்ப்புற ரசிகர்கள்தான் எங்கள் இலக்கு என்னும் முடிவுக்கு வரமுடியாது. பொள்ளாச்சி போன்ற ஊர்களில்கூட எங்கள் நாடகத்தை ரசித்திருக்கிறார்கள்.

மேடை நிர்வாகம்

மேடை நிர்வாகமும், நேர்த்தியான இயக்கமும்தான் எங்கள் நாடகத்தில் ரசிகர்களைப் பெரிதும் கவரும் அம்சங்கள். ‘பிரதிபிம்பம்’ என்ற நாடகத்தில், சீனாவில் எப்படிப்பட்ட பொருட்கள் வீட்டில் புழக்கத்தில் இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதேபோன்ற பொருட்கள் மேடையில் பயன்படுத்தப்பட்டன. மேடை நிர்வாகத்துக்கு ஸ்ரீராம் - பிரசன்னா முழுப் பொறுப்பு. இப்படி ஒவ்வொரு துறையையும் ஈடுபாட்டோடு செய்கின்றனர் எங்களின் கலைஞர்கள்.

எங்கள் குழுவில் இருக்கும் 50 கலைஞர்களுமே காசை எதிர்பார்க்காமல் நாடகக் கலையை ரசிப்பவர்கள். பொறுப்பை உணர்ந்து செயல்படுபவர்கள். இதில் மூத்த கலைஞரான ஸ்ரீதர் முக்கியமானவராக இருக்கிறார். எங்கள் குழு 20-வது ஆண்டுப் பயணத்தை தொடங்கியிருப்பதே, எல்லோரது ஒருமித்த சிந்தனைக்கு சாட்சி.

சொன்ன நேரத்தில் தொடங்கும் நேர ஒழுங்கு, நாடகத்துக்கு மிகவும் முக்கியம். பொதுவாக 7 மணிக்கு நாடகம் என்றால் 7.20-க்கு தொடங்குவதைத்தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். அதனால், நேர ஒழுங்கை ஆரம்பத்தில் இருந்து மிகவும் கண்டிப்பாக எங்கள் குழுவில் கடை பிடித்தோம். அதனால், சரியான நேரத்துக்கு வந்த 10 பேருக்கு மரியாதை தரும் வகையில் நாடகத்தை ஆரம்பித்துவிடுவேன். இந்த நேர ஒழுங்கை இப்போது ரசிகர்களும் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

எங்கள் குழுவின் 20-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு சபாவுடன் சேர்ந்து, ஏறக்குறைய 60 நாடக அரங்கேற்றங்களை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை நடத்த உள்ளோம். புகழ்பெற்ற ரசிக ரஞ்சனி சபாவில் (ஆர்.ஆர்.சபா) டிசம்பர் 23 தொடங்கி ஜனவரி 1 வரை 10 நாடகங்களை அரங்கேற்றுகிறோம். திருவான்மியூரில் லயன்ஸ் கிளப்போடு சேர்ந்தும் ஜனவரியில் நாடகங்களை அரங்கேற்ற இருக்கிறோம்.

இவ்வாறு ஸ்ரீவத்ஸன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்