காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் - 17 லட்சம் மாணவர்கள் பயன்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்வி கற்க எந்த காரணமும் தடையாக இருக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அவர்களுடன் உரையாடினார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில், அவர் படித்த பள்ளியில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து வைப்பது பெருமையாக இருக்கிறது. இத்திட்டம் எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது.

கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். இப்போது அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளோம். இதனால், தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஒதுக்கீடு என்பதைவிட முதலீடு என்றே சொல்ல விரும்புகிறேன். மாணவர்களின் அறிவை, உள்ளத்தை மேம்படுத்த அரசு முதலீடு செய்துள்ளது. அது நிச்சயம் நாட்டுக்கு லாபம் தரும் வகையிலான ஆற்றலாக, திறமையாக வெளிப்படும்.

அரசு தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை தொடங்கி உள்ளது. அதிகாரிகள், ஆசிரியர்கள், சமையல் செய்யும் சகோதர, சகோதரிகளும் தாயுள்ளத்துடன் இதை தொடர்ந்து நடத்த வேண்டும்.

கடந்த ஓராண்டில் சுமார் 10 லட்சம்குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 92 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்தசிறப்பு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால், சுமார் 62 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

மாணவ, மாணவிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்க வேண்டும். கல்வி கற்க எந்த காரணமும் தடையாக இருக்க கூடாது. இதில் அரசு உறுதியாக உள்ளது. படிப்பு மட்டும்தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகள், தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், எம்.செல்வராஜ் எம்.பி., நாகை மாலி எம்எல்ஏ, ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை செயலர் பி.செந்தில்குமார், சமூகநலம், மகளிர் உரிமை துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊரக வளர்ச்சி,ஊராட்சி துறை இயக்குநர் பா.பொன்னையா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி, சமூகநலத் துறை கூடுதல் இயக்குநர் எஸ்.பி.கார்த்திகா, நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்து வளர்ந்த வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில்,திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

‘பசிப்பிணியையே அறியக் கூடாது’: இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘திருக்குவளையில் வரலாற்றின் புதியதொடக்கம். நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி 2021 வரை மதிய உணவு திட்டங்களே இருந்தன. நூறாண்டுகள் கடந்து காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளோம். முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பசியாற்ற உள்ளது. என் அழைப்பை ஏற்று தங்கள் தொகுதிகளில் திட்டத்தை தொடங்கி வைத்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி. பசிப்பிணி என்பதையே மாணவர்கள் அறியக் கூடாது. அறிவுப்பசி ஒன்றே அவர்களுக்கு வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE