ரிசர்வ் வங்கி சார்பில் வினாடி வினா போட்டி: தென்னிந்திய அளவில் கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம்

By க.சக்திவேல்

கோவை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆர்பிஐ சார்பில் அகில இந்திய நிதியியல் கல்வி வினாடி வினாடி போட்டிகள் அறிவிக்கப்பட்டு, வட்டார, மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்றன. 38 மாவட்டங்களில் முதலிடம் பிடித்தவர்களுக்கான மாநில அளவிலான போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், கோவை அணி முதலிடம் பிடித்தது.

அதைத்தொடர்ந்து, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவில் முதலிடம் பிடித்த அணிகள் பங்கேற்ற தெற்கு மண்டல அளவிலான வினாடி வினா போட்டி ஹைதராபாதில் நேற்று (ஆக.25) நடைபெற்றது. இதில், கோவை காந்தி மாநகர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர் எஸ்.ஆகாஷ், மாணவி ஜி.ராம்பிரியா ஆகியோர் அடங்கிய அணி முதலிடம் பிடித்தது. இவர்களுக்கு வழிகாட்டியாக ஆசிரியர் சுமதி செயல்பட்டார். கேரளா இரண்டாம் இடமும், தெலங்கானா மூன்றாமிடமும் பிடித்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ்கள், கோப்பை ஆகியவை வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான போக்குவரத்து செலவு, தங்குமிட வசதியை ஆர்பிஐ செய்து கொடுத்திருந்தது. மேலும், கோவை அணியானது வரும் செப்டம்பர் 14-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கும் தேர்வாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE