“அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு சம்பட்டி அடி தீர்ப்பு” - ஆர்.பி.உதயகுமார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘அதிமுகவில் குழப்பம், இடையூறு ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியான சம்பட்டி” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாட்டுத்தாவணி உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, காய்கறி விலை உயர்வு இதைப் பற்றி எல்லாம் ஸ்டாலின் கவலைப்படவில்லை. தற்போது எந்த கட்டமைப்பு இல்லாமல் தற்காலிகமாக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. ஆனால் சத்துணவு திட்டமே நின்று விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சத்துணவு திட்ட பணியாளர் யாரும் இதில் பயன்படுத்தப்படவில்லை. 54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணித்திட்டத்தை வழங்கினோம். 13 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை வழங்கினோம். ஆனால் அதையெல்லாம் மூடு விழா கண்டு சில திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு என்று பச்சை பொய் பேசினார்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

தமிழக சட்டசபையில் உள்துறைக்கான மானிய கோரிக்கையில், கோடநாடு கொலை வழக்கு குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். அந்த குறிப்பு எல்லாம் சட்டமன்றத்தில் உள்ளது. அதில் கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு. எந்த பின்புலம் இல்லாமல் இன்று எடப்பாடி பழனிசாமி உயர்ந்துள்ளார். திமுகவின் பி.டீமாக பன்னீர்செல்வம் உள்ளார்.

அதனாலே திருச்சியில் பன்னீர்செல்வம் மாநாடு நடத்தினார். திமுகவுக்கு எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது .இதனை தொடர்ந்து மக்களை குழப்பும் வண்ணம், இடையூறு ஏற்படுத்த நினைத்து தொடுத்த வழக்கில், இன்றைக்கு நீதிமன்றம் சரியான சம்பட்டி அடியான தீர்ப்பை வழங்கி உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE