“காசு கொடுத்தால்தான் தண்ணீர் திறக்கிறார்கள்” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக மண்டலத் தலைவரே புகார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘காசு கொடுத்தால்தான் வால்வு ஆப்ரேட்டர்கள் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்’’ என்று திமுக மண்டலத்தலைவரே மாநகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், 2021-2022-ம் ஆண்டில் முடிக்க வேண்டியவை. கடந்த காலத்தில் இப்பணிகள் விரைந்து முடிக்காததால் தற்போதுதான் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சியில் மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் எதிர்காலத்தில் மாநகராட்சியில் சுகாதாரமான குடிநீர், நல்ல சாலை வசதி, கழிவு நீர் பிரச்சனை இல்லாத சூழல் அமைய உள்ளது. அதுவரை சில சிரமங்களை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

விவாதம் தொடங்கியதும், திமுக கவுன்சிலர் குட்டி என்ற ராஜேந்திரன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள், திடீரென்று எழுந்து, ‘ரத்து செய் மத்திய அரசே ‘நீட்’ தேர்வை ரத்து செய்’ என சிறிது நேரம் கோஷமிட்டனர். அதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர், நாகஜோதி சித்தன் தன்னுடைய தோள்பட்டை இரண்டிலும் கோரிக்கை மனுக்களை தொங்கவிட்டப்படி நேரடியாக தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து மாநகராட்சி ஆணையாளர், மேயர் அமர்ந்திருந்த மாடம் மீது ஏறி நின்று தன்னுடைய எந்த கோரிக்கையும் மாநகராட்சி நிறைவேற்றவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து அவர் மாநகராட்சி ஆணையாளரிடம் “விளாங்குடி 20-வது வார்டில் திருவாதூர் ஆதீனம் இடத்தில் குடியிருப்பு பகுதியில் சுமார் 400-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 79 க்கு மேற்பட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை தொட்டி இணைக்காமல் சுமார் ஏழு தெருக்களுக்கு அடிப்படை வசதியான முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் பாதாள சாலை சாக்கடை திட்டம் பணிகள் இது வரை தொடங்கவில்லை. தார் சாலை பணிகளை முறையாக இல்லை. மாநகராட்சியில் வழங்கும் மனுக்கள் வழங்கியும் மனுக்களை காகிதம் போல் எண்ணி குப்பையில் போடும் நிலை உள்ளது” என்றார். ஆணையாளர் அவரை சமாதானம் செய்து இருக்கையில் போய் அமர கூறினார்.

மாநகராட்சி எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா: 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கொடுக்கிறீர்கள். அதில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. உங்கள் திமுக கவுன்சிலர் கூட மக்களை திரட்டி மறியல் செய்தார். எங்கள் கட்சி கவுன்சிலர்கள் வார்டிலும் இதேபிரச்சனை உள்ளது. அவர்களும் மறியலுக்கு தயாரானார்கள். ஆனால், நான் இன்று கூட்டத்தில் பேசிவிட்டு அவர்கள் நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அழைத்து வந்தேன்.

மேயர் இந்திராணி: எதெற்கெடுத்தாலும் கவுன்சிலர்களை பொதுமக்களை அழைத்துக் கொண்டு மறியலுக்கு செல்லக்கூடாது. மாநகராட்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் நடக்கிறது. அதில் சில பிரச்சனைகள் இருந்தாலும், என்னிடம், ஆணையாளரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீங்கள் போராட்டம் நடத்தலாம்.

அதிமுக கவுன்சிலர் சண்முக வள்ளி: மறியல் நடத்தக்கூடாது என்று சொல்லுகிறீர்கள். ஆனால், மக்கள் மறியல் செய்கிற வார்டுகளில்தான் உடனடியாக வேலைகள் நடக்கிறது.

மண்டலத்தலைவர் முகேஷ்சர்மா: மாநகராட்சியில் தற்போது குடிநீர் திறந்து விடுவதற்கு வால்வு ஆப்ரேட்டர்கள் இல்லை. அவர்கள் வெவ்வெறு பணிகளுக்கு சில மாதத்திற்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வால்வு ஆப்ரேட்டர் பணியே தெரியாதவர்கள்தான் தற்போது இப்பணியில் உள்ளனர். அதனால், அவரவர் இஷ்டத்திற்கு வார்டுகளில் தண்ணீர் திறந்துவிடுவதும் மூடுவதுமாக உள்ளனர். அதனால், வார்டுகளில் பல இடங்களில் தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. காசு கொடுத்ததான் வால்வு ஆப்ரேட்டர்கள் தண்ணீர் திறக்கும்நிலையும் உள்ளது.

குடிநீர் விநியோகமும், பாதளசாக்கடை பராமரிப்பும் மக்களுடைய அடிப்படை அத்தியாவசிய பணிகள். அதனை தினமும் கண்காணிக்கவும், செயல்படுத்தவும் தனி அதிகாரிகள் குழுவை நியமிக்க வேண்டும். ஆணையாளர், மேயர் மாத்திற்கு இரண்டு முறையாவது ஒரு வார்டிற்கு ஆய்வு செய்ய வர வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள், பணியாளர்கள் வேலை செய்வார்கள்.

மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார்: துணை ஆணையாளர், உதவி ஆணையர் தலைமையில், குடிநீர் விநியோகம், பாதாளசாக்கடை பராமரிக்க விரைவில் தனிக்குழு ஏற்படுத்தப்படும்.

மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: தெருநாய்களை தொல்லை அதிகரித்துள்ளது. அதனை பிடிக்க போதிய நாய் பிடிக்கும் வண்டிகள் இல்லை. ஒரே நாளில் 8 பேரை கடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தெருக்களில் ஏகப்பட்ட நோய்வாய்ப்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன. மாநகராட்சி இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறது. முன்பு மண்டலத்திற்கு 2 வண்டிகள் இருந்தன. தற்போது மாநகராட்சிக்கே 2 வாகனங்கள் மட்டுமே உள்ளன. போதிய மருத்துவர்களும் இல்லை.

ஆணையாளர் பிரவீன்குமார்: நாய்களை பிடித்து கருத்தடை செய்ய கால்நடை பராமரிப்பு துறையில் டெப்டேசஷனில் வர வைப்பதற்கு ஒரு கால்நடை மருத்துவரை கேட்டுள்ளோம். அவர்களும் உறுதியளித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் விஜயா: கான்டிராக்டர்கள் சொல்வதைதான் அதிகாரிகள் கேட்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை. மக்கள் அது சரியில்லை, இது சரியில்லை எங்கள் வீட்டிற்குதானே திரண்டு வருகிறார்கள். எங்கள் கவனத்திற்கு வராமலே வார்டுகளில் பணிகள் நடக்கிறது.

மேயர் இந்திராணி: மண்டலத்தலைவர், கவுன்சிலர்கள் சொல்வதை அதிகாரிகள் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் கவனம் இல்லாமல் வார்டுகளில் பணிகள் நடக்கக் கூடாது. அவர்கள் கையோப்பம் பெற்று பணிகள் நடக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE