தீபாவளியை முன்னிட்டு ஆவின் இனிப்பு உற்பத்தியை உயர்த்த முடிவு

By செய்திப்பிரிவு

அரூர்: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தருமபுரி மாவட்டம் ராமியண அள்ளியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஆவின் தயாரிப்பு பொருட்களான பட்டர், சீஸ், பனீர் உள்ளிட்டவை தரமானதாகவும், சுவையானதாகவும் உள்ளதால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கூடுதலாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவின் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் கடந்த தீபாவளியை விட நிகழாண்டில் 25 சதவீதம் ஆவின் இனிப்புகளுக்கு தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்ப தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பேசியது: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை நிலையான வருவாய் ஈட்டக் கூடிய சங்கங்களாக உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அதிகாரிகளின் முனைப்பான பணிகளின் மூலம் தான் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியும். எனவே, அதிகாரிகள் அதற்கேற்றபடி பணியாற்ற வேண்டும். அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் தொடர்புடைய கால்நடை மருத்துவர்களின் விவரங்கள் எளிதாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

பின்னர், தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே நபார்டு திட்டம் மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாக அலுவலகம் மற்றும் கொள்முதல் உள்ளீட்டு அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றையும், தருமபுரி அடுத்த செம்மாண்டகுப்பம் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளில், ஆவின் பொது மேலாளர் மாலதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE