கோடநாடு வழக்கை முறையாக விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் - கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையே, 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் கடந்த ஜுலை மாதம் 29-ம் தேதி மேச்சேரி போலீஸாரால் தனபால் கைது செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்றார்.

ரூ.10 லட்சம் கேட்டார்: இந்நிலையில், சேலத்தில் நேற்று தனபால் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால், மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் ரூ.10 லட்சம் கேட்டு, நான் கொடுக்காததால் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார். மேலும், தனி அறையில் அடைத்து அடித்து சித்ரவதை செய்ததுடன் பல்லை உடைத்து பிடுங்கினார்.

தடயங்களை அழித்த போலீஸ்: கோடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த 2 செல்போன்களை போலீஸார் அழித்தனர். ஆனால், தடயங்களை நான் அழித்ததாக என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கோடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக எனது தம்பி ஏற்கெனவே என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை போலீஸார் அது சம்பந்தமாக என்னை அழைத்து விசாரிக்கவில்லை. என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சிபிசிஐடி போலீஸிடம் அளிப்பேன். முதல்வரை சந்திக்கவும் தயாராக உள்ளேன்.

கோடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக சங்ககிரியில் ஒருவரிடம் 3 பைகளையும், சேலத்தில் உள்ள ஒருவரிடம் 2 பைகளையும் எனது சகோதரர் கொடுத்ததாக என்னிடம் கூறினார்.அப்போது, சயனும் உடன் இருந்தார். இதற்கிடையே மர்மமான நிலையில் சயனும் இறந்து விட்டார்.

கோடநாடு கொலை வழக்கை முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். இந்த வழக்கில் காலதாமதம் ஏன் என்று தெரியவில்லை. எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே, எனக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை முறையாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE