சந்திராயன்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கவுரிமணி

By செய்திப்பிரிவு

நாமக்கல்: சந்திராயன்-3 திட்டத்தில் டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி செயல்பட்டுள்ளார்.

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம், சந்திரனில் கால் பதித்து சரித்திர சாதனை படைத்துள்ளது. இது உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த சந்திராயான்-3 திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் செயல்பட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவுரிமணி (50) என்ற விஞ்ஞானி டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டுள்ளார்.

இவர் சந்திராயன்-3 திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் மூலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள், சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் சந்திரனில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் சந்திரனை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவற்றை பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணியில் ஈடுபட்டவர்.

மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில், தொலை தொடர்பு பொறியியலில் எம்.இ. பட்டம் பெற்ற இவர், கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், செயற்கைக்கோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் டாக்டர் வீ.ராமராஜ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE