கும்பகோணம் | விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி பங்கேற்காததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோட்டாட்சியர் பங்கேற்காததால் விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் ஒரு நாள் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் படி, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாலை நடைபெற்றது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு விவசாய அமைப்புகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் இளங்கோவன் மற்றும் 5 துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளைக் கண்டித்து, கூட்டத்தை புறக்கணித்து, கூட்ட வாயிலில் கண்டன முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்து வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் அந்த இடத்திற்கு வந்து, முதல்வர் வருகையையொட்டி, அது தொடர்பான பணிகளுக்காக கோட்டாட்சியர் சென்றுள்ளதால், இந்தக் கூட்டத்தில் அவரால் பங்கேற்ற முடியவில்லை எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இந்தக் கூட்டத்திற்குப் பதில், மற்றொரு தேதியில் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்த விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE