சென்னை: "தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். ஆளுநராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியிருப்பது அவரது ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. எந்த பிரச்சினையிலும் அரசமைப்புச் சட்ட அதிகார வரம்புகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுவரை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே ஆளுநர் கிடப்பில் போட்டு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அவரது தமிழக விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது. அதில் குறிப்பாக கூட்டுறவு சங்கங்களின் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைப்பது, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட முக்கிய கோப்புகளை கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். நீட் தேர்வு திணிப்பை எதிர்த்து கடும் எதிர்ப்பு உருவான நிலையில் தான் அதுகுறித்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அங்கே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் நிறைய இருக்கின்றன. நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கையின்படி 2010-11 இல் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த முதல் தலைமுறையை சேர்ந்தவர்களின் விழுக்காடு 24.61 சதவிகிதமாக இருந்தது. 2017 இல் நீட் தேர்வுக்கு பிறகு இந்த சதவிகிதம் வேகமாக சரிந்து முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பது 14.46 சதவிகிதமாக ஆகி, மீதி பெரும்பான்மையான 85.54 சதவிகித இடங்களில் முதல் தலைமுறை இல்லாத மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதேபோல நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்கள் தான் தேர்வு பெறுகிறார்கள். அதைத் தவிர, நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக செலுத்தி எந்திர கதியில் தயாரிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு பெற்று வருகிறார்கள். நீட் தேர்வு என்பது வசதி படைத்தவர்களுக்கான தேர்வாக மாறிவிட்டது. இதனால் தான் கூலி தொழிலாளியின் மகளான அனிதா உள்ளிட்ட பலர் தற்கொலை செய்து கொள்கிற அவலநிலை ஏற்பட்டது.
» ஈஷா நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகள்: தமிழ்நாடு முழுவதும் வரும் 25-ம் தேதி தொடக்கம்
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.24 - 30
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் ? உயர்கல்வித்துறை அமைச்சரின் ஆலோசனை இல்லாமல், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக ஆளுநர் கடிதம் எழுதுவது அப்பட்டமான சட்டவிரோதச் செயலாகும்.
தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். ஆளுநராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago