திருப்பூரில் செயலர் பதவிகள் காலியாக உள்ளதால் வேரறுந்த மரம் போலகாணப்படும் ஊராட்சிகள்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகள் உள்ளன. இதில் பல்வேறு ஊராட்சிகளில் செயலர்கள் பணியிடம் காலியாக இருப்பதால், பலர் கூடுதல் பொறுப்பில் பல்வேறு ஊராட்சிகளை கவனித்து வருகின்றனர். ஊராட்சிக்கென தனியாக அதிகாரிகள் இல்லாததால், கிராமங்களின் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கிராம ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவரும், பொங்கலூரை சேர்ந்தவருமான டி.கோபால் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக புகார் அனுப்பி வருகிறோம். கிராமசபைக் கூட்டங்களிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனுக்கள் அளிக்கப்படுகின்றன. ஊராட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஊராட்சி தலைவரும், செயலரும்தான்.

இவர்கள் இணைந்து தான் ஊராட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், பல ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களை காட்டிலும், செயலர்களின் ஆதிக்கம் இருக்கிறது. பல்வேறு ஊராட்சிகளில் செயலர்கள் இன்றி வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் துலுக்கமுத்தூர், பாப்பான்குளம், செம்பியநல்லூர், மோளரப்பட்டி, வேலாயுதம்பாளையம், காளிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், மாதப்பூர், அலகுமலை, பட்டம்பாளையம், புங்கமுத்தூர், மொடக்குப்பட்டி, இடையபாளையம், காவுத்தாம்பாளையம், வட்டாள்பதி, வள்ளியரச்சல், லக்கமநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, மாம்பாடி, வேடம்பட்டி, பழங்கரை, மேற்குபதி, ஆரத்தொழுவு, செங்கோடம்பாளையம், சோளமாதேவி, சின்னகுமாரபாளையம் ஆகிய 26 ஊராட்சிகளில் செயலர்கள் இல்லை. இவற்றில் பெரும்பான்மை இடங்கள் காலியான நிலையில் நிரப்பப்படவில்லை.

சில இடங்களில் செயலர்கள் மருத்துவ விடுப்பில் இருப்பதால், அருகில் உள்ள ஊராட்சிகளின் பொறுப்பு செயலர்களை நியமித்து பணிகளை செய்கின்றனர். கிராம ஊராட்சியில் மனித வளம் என்பது மிகக்குறைவு. அதில் பிரதான ஆதாரமாக இருக்கக்கூடிய ஊராட்சி செயலர் பதவி காலியாக இருப்பதால், பல மாதங்களாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காலியாக உள்ள ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் செயலர் இடம் காலியாக இருக்கும் பல ஊராட்சிகள் உள்ளன. பொறுப்பு நியமிக்கப்படும் அலுவலர்கள், 4 முதல் 6 மாதங்களுக்குள் வேறு இடத்துக்கு மாறிவிடுவதால், கிராமப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு, வளர்ச்சி காண முடியாத நிலை உள்ளது. உதாரணத்துக்கு பட்டம்பாளையம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக ஊராட்சி செயலர் இல்லை.

இதனால் சீரான வளர்ச்சியை கிராமம் எட்ட முடியவில்லை. அதேபோல, வரவு - செலவு தயார்படுத்துவது தொடங்கி, வளர்ச்சிக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றுவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை கண்காணிப்பது, கிராம பணிகளுக்கு ஒப்பந்தம் கோருவது, கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகள், பண்டிகைகள் மற்றும் சுகாதாரம் என அனைத்துக்கும் ஊராட்சி செயலர்தான் பக்கபலமாக இருப்பார்.

வரி வசூல் தொடங்கி பல்வேறு வருவாய் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. ஆனால், பல ஊராட்சிகளில் செயலர் இல்லாததால், வேரறுந்த மரம்போல கிராம ஊராட்சிகள் பலமிழந்துவிட்டன” என்றனர்.

திருப்பூர் மாவட்ட கிராம ஊராட்சிகளின் அலுவலர்கள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் செயலர் பணியிடம் காலியாகத்தான் உள்ளது. அவை நிரப்பப்படும்போது, திருப்பூர் மாவட்டத்திலும் காலியிடங்கள் நிரப்பப்படும். கிராம வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய ஊராட்சி செயலர் பதவி நிரப்பப்பட வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு. பல இடங்களில் பொறுப்பு ஊராட்சி செயலர்கள் மூலமாக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE