சென்னை: உற்பத்தித் துறையில் இந்தியாவின்முன்னணி மாநிலமாகத் தமிழகத்தை முன்னிறுத்த தீவிர முயற்சி எடுத்து வருவதாக பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தின் வளர்ச்சியிலும், அனைவருக்கும் பலனளிப்பதை உறுதி செய்வதிலும் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைப்பதில் இருந்து அதனைச் செயல்படுத்தும் வரை, பல்வேறு துறை வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்பதுடன், உங்களைப் போன்ற பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து, செயல்பட்டு வருகிறது.
நீங்கள் தெரிவித்த உத்திகளின் அடிப்படையில், கடந்த 2 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் ஏற்றுமதிக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கொள்கை, சரக்குப் போக்குவரத்துக் கொள்கை, மின் வாகனங்கள் கொள்கை போன்ற பல்வேறு துறைகளுக்கான தனித்தனிக் கொள்கைகளை அறிவித்துள்ளோம்.
குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரும் தோல் அல்லாத காலணி உற்பத்தி, மின் வாகன உற்பத்தியில் நாட்டிலேயே அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில், மிட்சுபிஷி, பெகட்ரான், ஓலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 241 முதலீட்டுக் கருத்துருக்கள் மூலம், ரூ.2,97,196 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
கடந்த 2020-21-ல் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியில் 4-வது இடத்தில் இருந்த தமிழகத்தை 2 ஆண்டுகளில் முதலிடத்துக்கு உயர்த்தியுள்ளோம். இத்தகைய பல்வேறு முயற்சிகளால், நாட்டிலுள்ள மாநிலங்களிலேயே ஏற்றுமதி வளர்ச்சிக்கான தயார் நிலைக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணிமாநிலமாகத் தமிழகத்தை முன்னிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
`மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்களின் மருத்துவச் செலவு குறைந்துள்ளதாக, மாநிலத் திட்டக் குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்துக்கு இணையாக, கல்வித் துறையில் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தி்ல் 27 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், மாணவர்கள், இளைஞர்கள் தொழில்சார்ந்த பயிற்சி பெற,‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டு ஓராண்டில் 13 லட்சம் பேர் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். 25ஆயிரம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் மூலம்இதுவரை 1.50 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில்’ தற்போது 1,978 பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நாட்டுக்கே முன்மாதிரியான இத்திட்டத்தை ரூ.404 கோடியில் 31,008 பள்ளிகளில் பயிலும் 18.54 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம்.
அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை என்பது, பெண்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், சமூகத்தில் சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு வழிவகுக்கும்.
இத்திட்டத்தில், 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வருவாய், சொத்துகள், மின் பயன்பாடு போன்ற தகுதிக் குறியீடுகள் பற்றிய தரவுகளை பல மாதங்களாகத் தொகுத்துள்ளோம். இவற்றின் மூலம் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளைத் தேர்ந்தெடுத்து, பயன்பெறச் செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இத்திட்டத்தை செயல்படுத்த உங்களின் ஆலோசனைகள் இன்றியமையாதவை. இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மற்றும் பொருளாதாரக் குழுவில் உள்ள எஸ்தர் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்ரமணியன், எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago