டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி | அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பிய ஆளுநர் - சந்தேகங்களுக்கு விளக்கம் கோரியுள்ளதாக தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை, ஆளுநர் ஆர்.என்.ரவி சில விளக்கங்கள் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் கோரியுள்ள விளக்கங்களை விரைவில் அனுப்ப அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகால அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள், நேர்காணல்கள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

55 ஆயிரம் பேர் நியமனம்: இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், தமிழக அரசு துறைகளுக்கு புதிதாக 55 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பும் டிஎன்பிஎஸ்சி மூலமாகத்தான் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆனால், கடந்த பல மாதங்களாக டிஎன்பிஎஸ்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நேர்காணல் உள்ளிட்டவற்றைநடத்த முடியாத சூழ்நிலைஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழக தலைமை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு கடந்த ஜூன்30-ம் தேதி ஓய்வு பெற்றார். இவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவையும், உறுப்பினர்களாக 8 பேரையும் புதிதாக நியமித்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

முதல்வரால் பரிந்துரைக்கப்படும் இதுபோன்ற நியமனங்களில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் ஏற்கெனவே, நீட் ரத்து மசோதா, அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடிப்பது ஆகிய விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

அத்துடன், தமிழக அரசுஅனுப்பிய பல்வேறு மசோதாக்கள், ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக அரசுதரப்பில் தொடர்ந்து பலமுறை சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 8 உறுப்பினர் தொடர்பான கோப்புகளும் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை, சில நாட்களுக்கு முன்பு அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

அதில் சில சந்தேகங்களை எழுப்பி, அதற்கான விளக்கங்களையும் அவர் கோரியுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக, இப்பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்கள், பரிந்துரை பட்டியலை இறுதி செய்தது எப்படி? நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விவரங்களை ஆளுநர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் கோரியுள்ள விளக்கங்களை விரைவில் அனுப்ப தமிழக அரசின் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE