சென்னை தினம் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தினத்தையொட்டி, ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உருவாக்கப்பட்டதன் 384-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி,தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துசெய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: சென்னை தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். வியப்பூட்டும் கலாச்சார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் தொடர்ச்சியை, அதே ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: வந்தாரை வாழ வைக்கும் சென்னை. வீழ்வாரை எழவைக்கும் சென்னை. பட்டிதொட்டியில் இருப்பவர்கூட பெட்டிக்கடை வைத்து பிழைக்கலாம் என, தன்னம்பிக்கையோடு வருவோரை தன் தாய்மடியாய் தாங்குபவள் சென்னை. உன்னை, என்னை மட்டுமல்ல கண்ணைப்போல அனைவரையும் காப்பவள் சென்னை. நமக்கு பிடித்த சென்னைக்கு பிறந்த தினம்.

முதல்வர் ஸ்டாலின்: தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடு என பெயர் சூட்டினார் மறைந்த முன்னாள் முதல்வர்அண்ணாதுரை. தமிழ்நாட்டின் தலைநகருக்கு சென்னை என பெயர்மாற்றினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா, ஊர் என்பதா, உயிர் என்பதா சென்னையை. வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நமது சென்னை, இன்னும் பலப்பல நூற்றாண்டுகள் சீரும் சிறப்புமாக இருக்கவும், மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கவும் வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: கடந்த 384 ஆண்டுகளில் சென்னைஅடைந்த வளர்ச்சி வியக்கத்தக்கது. இந்த பெருமைகள் மட்டும்போதாது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக சென்னை மாறவேண்டும். அதற்காக கடுமையாகஉழைக்க உறுதி ஏற்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE